Our Feeds


Wednesday, January 25, 2023

ShortNews Admin

ஹிஜாப் அணிந்து சுஹைரியா மத்ரஸாவுக்கு சென்றாரா சாரா ; குறுக்கு விசாரணைகளில் வெளிப்படும் உண்மை நிலை(எம்.எப்.எம்.பஸீர்)


பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளராக அடையாளப்படுத்தப்படும்  புத்தளம், அல் சுஹைரியா மதரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும்  மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்சியம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை (23) இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 2 ஆம் பிரதிவாதி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர்  வழக்குத் தொடுநர் தரப்பின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன  சில்வா மீண்டும் கேள்விகளைத் தொடுத்து, சாட்சிகளை பெற்ற பின்னர் அவரது சாட்சியம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது விஷேடமாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக பரவலாக  நம்பப்படும் லதீபா எனும் பெண்  மற்றும்  சாய்ந்தமருது வெடிப்பின் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரன் ஆகியோர், தாக்குதல்களுக்கு முன்னர் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸாவுக்கு சென்று வந்துள்ளதாக அளிக்கப்பட்டுள்ள சாட்சியம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் தேவைக்காக,  அவ்விருவரின் பெயரையும் இந்த விவகாரத்தில் முதல் சாட்சியாளர்  கூறுவதாக இதன்போது பரிந்துரைக்கப்பட்டது. எனினும் சாட்சியாளர் அதனை நிராகரித்தார்.

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு  கடந்த 23 ஆம் திகதி  திகதி  நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில்   விசாரணைக்கு வந்தது.

 அன்றைய தினம், பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

 முதல் பிரதிவாதியான  சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் , ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளிந்த இந்திரதிஸ்ஸ, பர்மான் காசிம் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

 2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வைச் செய்யும் நிலையில் அதற்காக பிரத்தியேக சட்டத்தரணிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி  திங்களன்று நடந்த வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்ய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  அடுத்த தலைவராக செயற்படவுள்ள  சிரேஷ்ட சட்டத்தரணி கெளஷல்ய நவரட்ன நேரடியாக மன்றில் ஆஜராகியிருந்தார்.

 வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா ஆஜராகினார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க  ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவரும்  நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ' இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில்  கடந்த திங்களன்று நடந்த விசாரணைகளின் போது 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, சாட்சியாளரை குறுக்கு விசாரணை செய்தார்.

குறுக்கு விசாரணைகளுக்கு முன்னர்,  மன்றில் ஆஜராகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள்,  கடந்த தவணை உத்தரவுக்கு அமைய, முதல் சாட்சியாளர் சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலங்கள் எந்த தினங்களில் வழங்கப்பட்டன என்பது தொடர்பிலான முழுமையான அறிக்கையினை  மன்றுக்கு சமர்ப்பித்தார்.

 இதனையடுத்து குறுக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

 இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர் போன்ற விடயங்களை, அல் சுஹைரியா மத்ரசாவுக்கு வந்த  சுபைர் சேர் மற்றும் அனீஸ் ஆகிய இருவரும் குறிப்பிட்டதாக  முதல் சாட்சியாளர் சாட்சியமளித்து குறிப்பிட்ட விடயங்கள், சி.ஐ.டி.யின் விசாரணைகளின் போது சொல்லப்படாதவை என்பதை சாட்சியாளர் இதன்போது ஏற்றுக்கொண்டார். சி.ஐ.டி. விசாரிக்கும் போது அந்த விடயத்தை தெரிவிக்க தனக்கு எந்த தடைகளும் இருக்கவில்லை எனவும், எனினும் தான் அதனை சி.ஐ.டி.க்கு தெரிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.

 இந்நிலையில், முதல் சாட்சியாளரின் சாட்சியம் பிரகாரம்,  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்ததாக கூரபப்டும் இரு பெண்கள் குறித்து குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

 இதன்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக நம்பபப்டும் சாரா ஜெஸ்மின் மற்றும் லதீபா ஆகியோரே அவ்வாறு வந்ததாக சாட்சியாளர்  முன்னர் அலித்த சாட்சியத்தை மையப்படுத்தி குறுக்கு கேள்விகள் தொடுக்கப்பட்டன.

அவ்வாறு  ஹிஜாப் அணிந்து வந்த பெண்கள், '1929' எனும் அவசர அழைப்பு இலக்கத்தை வழங்கி  ஏதும் பிரச்சினை எனின் உடனடியாக அழைக்குமாறு கூறியதாக   முதல் சாட்சியாளர்  குறிப்பிட்டார்.

1929 எனும்  இலக்கம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து முறையிட வழங்கப்பட்டிருக்கும்  இலக்கம் என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, அந்த இலக்கத்தை சாரா ஜெஸ்மின்  உங்களுக்கு வழங்கி அழைக்குமாறு  கூறினாரா? என கேள்வி எழுப்பினார்.

 அதற்கு  முதல் சாட்சியாளர் மெளனமாக இருக்கையில் மீண்டும் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

சேவ் த பேர்ள் அமைப்பிலிருந்து குறித்த இரு பெண்களும் வந்ததாக மன்றுக்கு சாட்சியம் ஊடாக தெரிவிக்கப்படவே,  ஹிஜாப் அணிந்து சென்ற இரு பெண்களும் சேவ்த பேர்ள் அமைப்பினர் என்பதையும் அவர்கள் குண்டுவெடிப்புடன் எவ்வித சம்பந்தமும் அற்றவர்கள் என்பதையும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள பதிவு செய்தார்.

 அத்துடன்  சாரா, லதீபா என அதனை மாற்றி, சி.ஐ.டி.யின் தேவைக்காக முதல் சாட்சியாளர் சாட்சியமளிப்பதாக சட்டத்தரணி சமிந்த அத்துகோரள பரிந்துரை செய்தார். அதனை சாட்சியாளர் நிராகரித்தார்.

இதனையடுத்து சிரேஷ்ட  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வாவின் நெறிப்படுத்தலில் மேலதிக சாட்சியத்தை முதல் சாட்சியாளர் வழங்கினார்.

 இதனையடுத்தி,  இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24 வரை ஒத்தி வைத்த நீதிமன்றம், 2,46,51,52 ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியது. 


நன்றி: வீரகேசரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »