Our Feeds


Wednesday, January 4, 2023

ShortTalk

இன்று வெளியாகவுள்ள உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிப்பு! - வேட்புமனுக் கோரல் எப்போது?



340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்பது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


அறிவிப்பு வெளியாகி 14 நாட்களின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த அறிவிப்பில், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, வேட்பாளர் விபரம், பெண் வேட்பாளர் பிரதிநிதித்துவம் மற்றும் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் உள்ளிட்ட விபரங்களும் உள்ளடங்கியிருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
 
இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறுகோரி உயர்நீதிமன்றில், நீதிப்பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரியான கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையக்குழுவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.'

நாடு பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில், தேர்தலை நடத்துவது ஏற்புடையதல்ல என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »