Our Feeds


Wednesday, January 4, 2023

ShortTalk

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் பிளவு - தேர்தல் நடக்குமா? நடக்காதா?



(எம்.மனோசித்ரா)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ள தினம் அண்மித்துள்ள நிலையில் , தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ள உள்ளக பிளவுகளை கருத்திற் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தப் பிளவிற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவாவுடன் ஒரு சிலர் மாத்திரம் உள்ளமையின் காரணமாக , எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கும் நிலையில் , பிரிதொரு தரப்பினர் நிதி நெருக்கடி காரணமாக தேர்தல் நடத்தப்படக் கூடாது எனத் தெரிவிக்கின்றமையே பாரதூரமாக உள்ளக ரீதியில் பிளவுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழலாம் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தேர்தலை நடத்துவதற்கு 12 பில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ள போதிலும் , வரவு - செலவு திட்டத்தில் 10 பில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேலதிக செலவுகளை முகாமைத்துவம் செய்வது கடினமாகும் என்பது பெருமளவானோரின் நிலைப்பாடாகவுள்ளது.

தேர்தலின் போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களுக்கான உணவு மற்றும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் என்பவற்றுக்கு திறைசேரியினால் நிதி வழங்கப்படாவிட்டால் தேர்தல் கடமைகளை நிறைவேற்றுவதில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இந்த சிக்கல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி, நிதி வழங்கப்படும் என்ற உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளாமல் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அவருடனுள்ள சிறு தரப்பினர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை நிதி அமைச்சு வழங்கும் என்று கண் மூடித்தனமாக நம்புவதாக ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டாலும், உள்ளக பிளவுகள் காரணமாக தேர்தல் கடமைகளிலும் இடையூறுகள் ஏற்படலாம் என்பது தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களின் நிலைப்பாடாகவுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளையும் கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிளவு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »