Our Feeds


Tuesday, January 24, 2023

ShortTalk

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயார் - ஐ.தே.க & SLPP யின் பிரச்சாரம் நடக்குமா? நடக்காதா?



(இராஜதுரை ஹஷான்)


ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்களை ஆரம்பிக்க மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினர் தலைமையிலான கூட்டணியினர் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வலுவான திட்டங்களை வகுத்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற  தேர்தலுக்கு மக்கள் விடுதலை முன்னணி மும்முரமாக தயாராகி வருகிறது. மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில், தொகுதி அமைப்பாளர் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் முதலாவது கன்னிக்கூட்டத்தை நாளை அநுராதபுரத்தில் நடத்த தீர்மானித்துள்ளது.

340 உள்ளூர் அதிகார சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி திசைக்காட்டி சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கிளிநொச்சி மாவட்டத்தில் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் உள்ளூர் அதிகார சபைகளுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், மூன்று மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தை கண்டி நகரில் நடத்த தீர்மானித்துள்ளது.

சுதந்திர மக்கள் முன்னணி – ஹெலிகொப்டர்

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் முன்னணியினர் நாடளாவிய ரீதியில் 215 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டது. இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தை நடத்துவது தொடர்பில் இதுவரை கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டது. இருப்பினும், இதுவரை கூட்டணி ஸ்தாபிக்கப்படவில்லை. ஒன்றிணைந்து போட்டியிடும் மாவட்டங்களின் பொதுச் சின்னம் அறிமுகப்படுத்தப்படவில்லை. தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்த இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »