Our Feeds


Thursday, February 16, 2023

ShortTalk

3 பில்லியனை வழங்கினால் தேர்தலை நடத்தலாம் ; இல்லையெனில் காலம் தாழ்த்தப்படலாம் - மஹிந்த தேசப்பிரிய



(எம்.மனோசித்ரா)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள செலவில் தேர்தலுக்கு முன்னர் 3 பில்லியன் வழங்கப்பட்டால் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறில்லை என்றால் மாத்திரமே சட்டத்திட்டங்களுக்கமைய குறுகிய காலத்திற்கு தேர்தலைக் ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஆணைக்குழுவிற்கு ஏற்படும் என்று முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டால், இதே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஏனைய தேர்தல்களையும் காலம் தாழ்த்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தவறானவை என்று எவராவது குறிப்பிடும் பட்சத்தில் அதனுடன் ஒருபோதும் என்னால் இணங்க முடியாது.

தற்போதைய தேர்தல் ஆணைக்குழு தனது வரையறைக்குள் சரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே எனது நிலைப்பாடாகும். ஏதேனுமொரு தேர்தல் நிதி நெருக்கடியால் காலம் தாழ்த்தப்படுமாயின் , இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலும் காலம் தாழ்த்தப்படக்கூடும்.

எனவே, நிதி இல்லை எனக் கூறி தேர்தலைக் காலம் தாழ்த்த அனுமதிக்கக் கூடாது. செலவுகளைக் கட்டுப்படுத்தி தேர்தலை நடத்த முடியும்.

தற்போது 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் செலவுகளைக் கட்டுப்படுத்தினால் 8 பில்லியனில் தேர்தலை நடத்தலாம். அதனை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இரண்டரை அல்லது 3 பில்லியன் ரூபா போதுமானது. அதனையும் கட்டம் கட்டமாக வழங்க முடியும்.

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்கு சீட்டுக்கள் 19ஆம் திகதியாவது விநியோகிக்கப்பட்டால் 28ஆம் திகதியளவில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த முடியும்.

எனவே மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படாது. இதனை மீறி இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் தேர்தல் ஆணைக்குழுவினால் குறுகிய காலத்திற்கு தேர்தலை ஒத்தி வைக்க முடியும். எனினும் அது அரசியலமைப்பின் பிரகாரம் குற்றம் என்பதால் தேர்தல் காலம் தாழ்த்தப்பட மாட்டாது என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »