Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

பேராசிரியர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச செலவில் விமான பயண சீட்டுக்கள் ? அமைச்சரவை யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு



(எம்.மனோசித்ரா)


பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தினால் விமான பயண சீட்டுக்களை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக தற்போது சமர்ப்பிக்காமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மீளாய்வு செய்து மீண்டும் அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஊடாக அமைச்சரவை செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை தயாரிப்பதற்கான கொடுப்பனவுகளை அரச பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு வழங்குவதோடு, அதற்கான வரியை அறவிடாமலிருக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதுகலை பட்டப்படிப்புக்களை தொடர்வதற்காக பேராசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் விடுமுறை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படுவதோடு , பெரும்பாலானோருக்கு இது புலமைப்பரிசிலாகக் கிடைக்கப் பெறுகின்றது. இதன் போது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் வெளிநாடு செல்கின்றமையால் அவர்களுக்கும் அரசாங்க செலவில் விமான பயண சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கான வரியை நீக்குமாறும், பல்கலைக்கழகங்களுக்கான உப வேந்தர்களை நேர்முகத்தேர்வின்றி தெரிவு செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்த யோசனைகள் அடங்கிய ஆவணம் உயர் கல்வி அமைச்சின் ஊடாக அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் திருத்தங்களை மேற்கொண்டு மீள சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »