Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

சமுர்த்தி பயனாளிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு இல்லை - அதிகரிக்கும் எதிர்ப்பு நிலை!



சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின்படி, மக்களிற்கான நலன்புரி நன்மைகளை வெட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளிற்கு அரச ஊழியர்கள் மத்தியிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


நலன்புரி நன்மைகளை பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அரசு அண்மையில் அறிவித்து, நடவடிக்கையில் இறங்கியது.


சமுர்த்தி கொடுப்பனவுகளை வசதியானவர்களும் பெறுகிறார்கள், அதனால் கொடுப்பனவை பெற வேண்டியவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அதனால் கொடுப்பனவு தேவையானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையென அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஆரம்பித்தது.


இந்த நடவடிக்கையின் மூலம், சமுர்த்திக் கொடுப்பன பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே நோக்கமாகும். வீடு வீடாக செல்லும் உத்தியோகத்தர்கள் இணைய வசதியூடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும், ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு 180 ரூபா வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.


எனினும், இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கிராம சேவகர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஒத்துழைக்க மறுத்தனர். இதையடுத்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி மீளாய்வு நடவடிக்கையை முன்னெடுக்க அரசு முயன்றது. எனினும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.


நாடு முழுவதும் மிகச் சில பிரதேச செயலக பகுதிகளில் மட்டுமே இந்த நடவடிக்கை குழப்பமின்றி நடந்தன. பெரும்பாலான பிரதேச செயலக பகுதிகளில் குழப்பமான நிலைமையே நீடிக்கிறது. ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தால் 300 ரூபா வழங்கப்படுமென அரசு சலுகையை அதிகரித்துள்ளதுடன், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் மூலம் மீளாய்வு நடவடிக்கையை முன்னெடுக்க அரசு முயற்சித்து வருகிறது.


கடமையிலுள்ள அரச உத்தியோகத்தர்களை தவிர்த்து, பிற தரப்பினரின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை எவ்வளவு வெளிப்படையாக இருக்கும், சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »