Our Feeds


Thursday, February 16, 2023

ShortTalk

IMF நிபந்தனைகளின் ஒரு கட்டத்தை மின் கட்டண அதிகரிப்பு மூலம் நிறைவேற்றி விட்டோம் - அமைச்சர் காஞ்சன.(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளமை ஆளும் தரப்பின் வேட்பாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார மீட்சிக்கு கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்று வழியேதும் கிடையாது, மின்கட்டண அதிகரிப்பையிட்டு கவலையடைகிறோம்.

இனி 24 மணித்தியாலங்களும் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த ஆண்டு முதல் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. மின்னுற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காத காரணத்தினால் மின்னுற்பத்தி கட்டமைப்பு பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் 24 மணித்தியாலங்களும் தடையில்லாமல் மின்சாரம் வழக்கப்பட வேண்டுமாயின் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை மீண்டும் வலியுறுத்தியது.

மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் இரு தடவைகள் அனுமதி வழங்கி போதும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காத காரணத்தினால் மின்கட்டண அதிகரிப்பு விவகாரம் இழுபறி நிலையில் காணப்பட்டது.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையினால் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உராய்வு எண்ணெய் ஆகியவற்றை கொள்வனவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமாக அமுல்படுத்தப்பட்ட மின்துண்டிப்பு மார்ச் மாதமளவில் பல மணித்தியாலங்கள் வரை நீண்டு சென்றது.

இதனால் நாட்டில் பாரிய மக்கள் போராட்டம் தோற்றம் பெற்று இறுதியில் அரசாங்கம் பதவி விலகி, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டது. 

நாளாந்த மின்விநியோக துண்டிப்பினால் சிறு மற்றும் நடுத்தர,மெகா பொருளாதார தொழிற்துறை வளர்ச்சி வீதம் 400 பில்லியன் ரூபாவினால் வீழ்ச்சியடைந்தது.

இந்நிலைமையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து 66 சதவீதத்தினால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்தது.

மின்கட்டணம்  திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் மின்சார சபையின் மாத வருமானம் தொடர்பில் வங்கி கட்டமைப்பிற்கு நம்பிக்கை தோற்றம் பெற்றுள்ளது.

இதற்கமைய நிலக்கரி கொள்வனவிற்கு இலங்கை வங்கி 22 பில்லியன் ரூபாவை மேலதிகமாகவும், புதுப்பிக்கத்தக்க  சக்தி வள விநியோகஸ்தர்களுக்கு நிலுவை தொகையை வழங்க மக்கள் வங்கி 50 பில்லியன் ரூபாவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் நீண்ட கால கடனை திருப்பி செலுத்துவதற்காக மின்கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. மின்கட்டணத்தை 66 சதவீதத்தால் அதிகரித்து இலங்கை மின்சார சபையின் நட்டத்தை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே மின்கட்டணம் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளமை ஆளும் தரப்பு வேட்பாளர்களுக்கும்,அரசாங்கத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு நாட்டின் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாது. மாற்ற வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்துள்ளோம்.

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீ லங்கன் எயார் லைன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு திறைசேரி நிதி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு இனி நிதிவழங்க போவதில்லை என்ற தீர்மானத்தை திறைச்சேரி கடந்த மாதம் முதல் செயற்படுத்துகிறது. இதற்கமைய மின்னுற்பத்திக்கு தேவையான செலவை இலங்கை மின்சார சபை திரட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறான பின்னணியில் தான் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் ஒரு கட்டத்தை மின்கட்டண அதிகரிப்பு ஊடாக நிறைவேற்றியுள்ளோம்.

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.அதற்கமைய இனி 24 மணித்தியாலமும் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கப்படும் அத்துடன் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், மத தலங்களுக்கு மின்விநியோகத்தில் விசேட நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டள்ளது.

மின்கட்டணத்தை இனி அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது.எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் தேசிய பெறுகை அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க சக்திவள திட்டத்தை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத தலங்களுக்கு இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 5 கிலோகிராம் பெறுமதியான மின் கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

மின்நிலுவை கட்டணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.வைத்தியசாலைகளின் மின்சார நிலுவை கட்டணத்திற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கப்படும்.ஏனைய தரப்பினம் தமது மாத மின்கட்டணத்தையும், நிலுவை கட்டணத்தையும் உரிய காலத்தில் செலுத்த வேண்டும் இல்லாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

போராட்டங்களுக்கு அடிபணிந்து மின்கட்டண திருத்தத்தை மீள்பரிசீலிக்க போவதில்லை. மின்கட்டண அதிகரிப்பை தொடர்ந்து பொருள் மற்றும் சேவை கட்டமைப்பின் கட்டண அதிகரிப்பை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது,ஆகவே அரச சேவைத்துறை ஊடாக நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »