Our Feeds


Thursday, March 9, 2023

ShortTalk

நாட்டில் 10 வீத முஸ்லிம்களில் 17 வீதமானவர்கள் சிறைகளில் - முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!



நாட்டின் சனத்தொகையில் 10 வீதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் உள்ள சிறைகளில் சிறைக்கைதிகளாக 17 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கவலை அளிக்கக் கூடியதகும் என்று முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.எம் பைசல் தெரிவித்தார்.


கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகப் பயிற்சி செயலமர்வின் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய இந்த ஊடகப் பயிற்சி செயலமர்வில் 100 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் 25 இற்கும் மேற்பட்ட பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.


இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் உரையாற்றுகையில் "இந்தப் பாடசாலையிலேயே நான் படித்ததேன். முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என். எம். அமீனும் இங்குதான் கல்வி கற்றார். நாங்கள் இருவரும் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.


நாட்டிலுள்ள சில ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெரும்பான்மை சமூக ஊடகங்கள் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனது ஊரான அறநாயக்க பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக நான் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.


பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் பிரதேச செய்திகளை எழுதும்போது உண்மைக்குப் புறம்பான செய்திகளை எழுதி ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். நான் அவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் என்னை கவலை கொள்ளச் செய்தது. அவர்கள் என்னிடம் "சுடச் சுடச் செய்திகள்... பிரேக்கிங் நியூஸ்... இப்படியாக அவசரமாக எழுதினால்தான் எமக்கு அதிக வருமானம் கிடைக்கும்" என்றனர். இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறி விட்டார்கள்.


பெரும்பான்மை சமூக ஊடகங்கள் அப்படிச் செய்தாலும் நீங்கள் அப்படிச் செய்ய ஒருபோதும் முன்வரக் கூடாது. நேர்மையாகவும் பொறுப்புடனும் அப்பணியைச் செய்ய வேண்டும். சரியான பாதையில், நேரான பாதையில் ஊடகவியலாளர்கள் பயணிக்க வேண்டும். உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஊடக தர்மத்தை பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களிடம் தயவாக வேண்டிக் கொள்கின்றேன்.


இந்தக் குற்றச் செயல்களை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும். எமது இளம் சந்ததியினரை பாதுகாத்து அவர்களை நல்வழிப்படுத்த அவசியமான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். தவறான வழியில் செல்ல முற்படும் இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த முயற்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் புத்திஜீவிகளும் படித்தவர்களும் கட்டாயமாக முன்னெடுக்க வேண்டும். நாம் மனிதநேயத்தை பேணக் கூடியவர்களாக எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் தான்தோன்றித்தனமாக செயற்பட முனைந்தால் எமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியாது. சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஏற்றதாக எமது செயற்பாடு இருக்க வேண்டும். நேர்மை, உண்மை, நியாயத்துடன் செயற்பட வேண்டும். நாட்டுப்பற்று எமக்கு முக்கியமானது" என்றார்


அஷ்ரப் ஏ சமத்...

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »