அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில், கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகின்ற 23-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, இன்று ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்துள்ளது.
இதன்படி, குறுகிய தொலைவை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா செலுத்தியுள்ளது.
இதுபற்றி தென்கொரிய இராணுவம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை வடகொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து காலை 7.41 மற்றும் 7.51 மணியளவில் 2 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியள்ளது.
குறுகிய தொலைவில் சென்று இலக்கை தாக்க கூடிய அவை 620 கி.மீ. தொலைவுக்கு சென்றன என தெரிவித்துள்ளது.
வடகொரிய ஏவுகணை பரிசோதனைபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பின்னர் கூறும்போது, வடகொரியா ஏவுகணை பரிசோதனை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதுபற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இந்த பரிசோதனையால் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறியுள்ளார்.
ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாஜூ ஹமடா இன்று கூறும்போது, 2 ஏவுகணைகளும் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் விழுந்தது போல் இல்லை என கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியை தொடர்ந்து, அதனை படையெடுப்புக்கான ஒத்திகை என்று வடகொரியா கூறியுள்ளது.
இதனை தொடர்ந்தே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது என பார்க்கப்படுகின்றது.
எனினும், கூட்டு இராணுவ பயிற்சியானது தற்காப்புக்காக நடத்தப்படுகிறது என்று சியோல் மற்றும் வாஷிங்டன் கூறுகின்றன.
வடகொரியாவின் அதிரடிக்கு ஜப்பானும் தயாராகி வருகின்றது என அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாஜூ மத்சுனோ கூறியுள்ளார்.