Our Feeds


Wednesday, March 8, 2023

SHAHNI RAMEES

கம்பளையில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்திய தந்தை...!

 

கம்பளையில் நபர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சை ஊட்டியதோடு தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், குறித்த நால்வரும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கம்பளை தெல்பிட்டிய செவனக் கிராமத்தில் நேற்றிரவு (07) இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது 4 வயது ஆண் பிள்ளையும் 7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும் குறித்த பிள்ளைகளின் தந்தையான 40 வயது நபருமே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கணவன் மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும் சம்பவதினத்தன்று மனைவி வீட்டிலிருந்து வெளியேறி இருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த குறித்த நபர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் தெரியாமல் இனிப்பு குளிர்பானத்தில் நஞ்சை கலந்து குடிக்குமாறு கூறிவிட்டு தான் தனது அறைக்குச் சென்று மது பானத்துடன் நஞ்சை கலந்து அருந்தியுள்ளாதாக தெரியவருகிறது.

 

இந்நிலையில் தனது தந்தையும் தம்பியும் தங்கையும் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வது சிறுமி இது குறித்து அயலில் வசித்த தனது பெரியப்பாவிடம் (தந்தையின் அண்ணன்) தெரிவித்ததையடுத்து பிரதேச வாசிகளுடன் இணைந்து நால்வரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

பிள்ளைகளுக்கு நஞ்சை அருந்த கொடுப்பதற்கு முன்னர் முன்பு எடுத்த பழைய புகைப்படங்களை குறித்த நபர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 

மேலும் கடந்த ஜனவரி மாதமும் புஸல்லாவ பெரட்டாசி தோட்ட மேமலை பிரிவிலும் குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை ஒருவர் தனது 12 மற்றும் 16 வயது பிள்ளைகளுக்கு நஞ்சை அருந்த கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »