மரக்கறி, தேங்காய், தேயிலை, கறுவா உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்று (28) தெரிவித்துள்ளார்.
நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு அரசாங்கத்தின் உரத் திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் வழங்கப்பட்ட போதிலும், ஏனைய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் பற்றாக்குறை தொடர்பில் விவசாயிகள் விவசாய அமைச்சுக்கு தொடர்ந்து முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த உண்மையை கருத்தில் கொண்டு நெல் மற்றும் சோளம் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய கலப்பு உரத்தை தயார் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இரண்டு அரச உர நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் கலப்பு உரங்களின் விலையை விட மிகக் குறைந்த விலையில் இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் இணைந்து சில புதிய உயர்தர கலப்பு உரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சந்தையில் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.