Our Feeds


Saturday, March 11, 2023

Anonymous

மு.க ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபை நிதி மோசடி - சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு விளையாடினாரா மேயர் ரகீப்? வாய் திறக்காக ஹக்கீம்?

 



றிப்திஅலி

ல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன.

கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத் தொழிலாளியான (labor) ஏ.ஆர்.எம். முஜாஹித் என்பவரின் பங்குபற்றலுடனேயே, இந்தப் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ள விடயம் ஆரம்ப கட்டவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எம்.எம். நபார் என்பவரினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாகனத் தரிப்பிட சேவையினை மேற்கொள்வதற்காக 2023.02.01ஆம் திகதி முஜாஹிதிடம் செலுத்தப்பட்ட 02 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான KMC/RE/23/056086 எனும் இலக்க பற்றுச்சீட்டு, எந்தவித அனுமதியுமின்றி கணிணியில் இருந்து நீக்கப்பட்டமை தெரியவந்ததன் மூலமே, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

வாகனத் தரிப்பிடம் தொடர்பான கோவையில் (file) இந்த குத்தகைப் பணம் வரவு வைக்கப்பட்டு, கட்ட வேண்டிய தொகையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்படி சேவைப் பெறுநருக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதன் பிற்பாடு, அத்தொகையானது கணக்குக்கு வரவு வைக்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்டவிசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இது போன்று 2022.08.10ஆம் திகதி வேலைத் தொழிலாளியான முஜாஹித்தினால் தயாரித்து வழங்கப்பட்ட மொத்த வருமானம் 02 லட்சத்து 2 ஆயிரத்து 513 ரூபாவாகும். எனினும் நாளுக்குரிய விபரமான வருமானப் பட்டியலில் 02 லட்சத்து 86 ஆயிரத்து 613 ரூபாவாக இருந்துள்ளது. இதன்படி 80 ஆயிரத்து 100 ரூபா – மாநகர சபையின் வருமானம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

தகவல்களை உள்ளீடு செய்து பின்னர் நீக்கியுள்ளனர்

இவை போன்று, கல்முனை மாநகரசபையின் பெயரில் 2020.01.01ஆம் திகதி தொடக்கம் 2023.02.15ஆம் திகதிவரையான 38 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 2,709 பற்றுச்சீட்டுகள், உரிய அதிகாரிகளின் எந்தவித அனுமதியுமின்றி TaxMan எனும் மென்பொருளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விடயம் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதுமாத்திரமல்லாமல், உள்ளீடு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களின் 830 தரவுகளில் வருமான வரிக்கோவை இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 892 புதிய வரிக் கோவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்தமென்பொருளில் காணப்பட்ட பல அடிப்படைத் தரவுகளில் ‘அட்மின்’ கடவுச் சொல்லினைப் (Password) பயன்படுத்தி பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து முஜாஹித் மற்றும் நிதிப் பிரிவில் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ. நஸீம் ஆகிய இருவரும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை பொலிஸ் நிலையத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நிதி மோசடிதொடர்பில் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி அம்பாறையிலுள்ள விசேட குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையினால் பணிநீக்கம் செய்யப்பட்ட முஜாஹித் மற்றும் நஸீம் ஆகிய இருவரும் விசேட குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பம்

இதற்கு மேலதிகமாக, குறித்த நிதி மோசடி தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் ஊடாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கல்முனை மாநகர ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிதி மோசடிதொடர்பில் ஆராய்வதற்காக – இரண்டு விசேட குழுக்கள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்கவினால் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை மாநகர சபை தொடர்பில் கிழக்கு மாகாண சபையினால் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட பல விசாரணை குழுக்களின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே குறித்த நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காகவும் விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, கிழக்கு மாகாண திறைசேரியின் நிதி மற்றும் வருமானத்துக்குப் பொறுப்பான பிரதம கணக்காளர் டி. செந்தில் நாதன் தலைமையிலான விசேடகுழு, கடந்த புதன்கிழமை (08) கல்முனை மாநகரசபைக் குகள விஜயம் செய்து, ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

‘நிதிப் பிரமாணங்களின் அடிப்படையில் அரச நிறுவனமொன்றில் ஒரு பற்றுச்சீட்டு ரத்துசெய்யப்பட்டிருப்பின்/நீக்கப்பட்டிருப்பின் அது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு கோவைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் கல்முனை மாநகர சபையில் ரத்துச் செய்யப்பட்ட /நீக்கப்பட்ட பற்றுச் சீட்டுகளில் எவையும் அவ்வாறு காணப்படவில்லை’ என, கணக்காளர் செந்தில் நாதன் தலைமையிலான குழு – இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.

இது போன்று, கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீத் தலைமையிலான குழுவொன்று கடந்த 26.02.2023ஆம் திகதி முதல், கல்முனை மாநகர சபையில் முகாமிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும், இக்குழுவின் விசாரணைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘மோசடித் தொகையினை குறைத்துக் காட்டும் செயற்பாட்டில், இந்த குழு ஈடுபட்டுள்ளது, அதனாலேயே குறித்த குழுவின் விசாரணை இதுவரை துரிதப்படுத்தப்படவில்லை’ என, பல பதிவுகளை ‘பேஸ்புக்’கில் காணமுடிந்தது.

மேற்படி குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கணக்காய்வாளர் றசீத், ‘எமது விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை திங்கட்கிழமை (13) கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கையளிக்கப்படும்’ என உறுதியளித்தார்.

அதுவரை இந்த விசாரணை தொடர்பில் ஊடகங்களுக்கு எந்தவித கருத்தும் கூற முடியாது எனவும், அவர் மேலும் குறிப்பிட்டார். இருந்த போதிலும், மாகாண கணக்காய்வு திணைக்களத்தினால் கல்முனை மாநகர சபைக்கு மாதம் இரு முறை கணக்காய்வுக்காக வந்தும், கடந்த பல வருடங்களாக இடம் பெற்று வந்த இந்த நிதி மோசடியினை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மோசடிப் பேர்வழியை நியமித்து – சலுகை வழங்கிய மேயர்

கல்முனை மாநகர மேயராக மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் கடந்த 2018.04.02ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மருதமுனையினைச் சேர்ந்த முஜாஹித் கல்முனை மாநகரசபையின் வேலைத் தொழிலாளியாக நியமிக்கப்படுகின்றார்.

நிதிப் பிரிவின் வருமானப் பகுதிக்கு பொறுப்பு உத்தியோகத்தருக்கு உதவியாக இருத்தல், நிதிப் பிரிவின் முகப்பு அலுவலகத்தில் துப்பரவாக இருப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வருமானம் அறவிடும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான அறவீட்டுப் பட்டியலை பொறுப்பு உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் முறையா கவழங்குதல் போன்ற பொறுப்புகளை உள்ளடக்கிய கடமைப் பட்டியல் – மேயர் றகீபினால் 2018.08.15ஆம் திகதி முஜாஹித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைப் பட்டியலை மீறி, முகாமைத்துவ உதவியாளரொருவர் மேற்கொள்ள வேண்டிய கடமையான நிதிகளை நேரடியாக கையாளும் செயற்பாட்டினை கடந்த பல வருடங்களாக முஜாஹித் மேற்கொண்டு வந்துள்ளார். அது மாத்திரமல்லாமல்,வேலைத் தொழிலாளியான இவருக்கு – மடிக் கணிணியொன்றும் கல்முனை மாநகர சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடமைப் பட்டியலை மீறி முஜாஹித் செயற்பட்டதை மேயரோ, முன்னாள் ஆணையாளர் எம்.சீ. அன்சார், முன்னாள் கணக்காளர் ஏ.எச். தஸ்தகீர் ஆகியோரோ தற்போதைய கணக்காளார்கே.எம். றியாஸ் என்பவரோ கணக்கிலெடுக்காமல் இருந்துவந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக அஸ்மி நியமிக்கப்பட்ட பின்னர், முஜாஹித்தை நிதிப் பிரிவில் இருந்து இடமாற்ற மேற்கொண்ட முயற்சி மேயரின் எதிர்ப்பினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை,கல்முனை மேயராக றகீப் நியமிக்கப்பட்ட பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் குப்பை வரி போன்ற பல புதிய வரிகளை அறிமுகம் செய்து, கல்முனை மாநகரில் வாழும் பொதுமக்களை நெருக்குதலுக்கு உள்ளாகினார்.

இந்தவரிப் பணத்தினை கணணி மயப்படுத்துவதற்காக விசேட மென்பொருள் ஒன்றினை கொள்வனவு செய்யுமாறு கல்முனை மேயருக்கு வேலைத் தொழிலாளியான முஜாஹித் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

சொந்த ஊர்காரர் ஊடாக மென்பொருள் கொள்வனவு செய்த மேயர்

இதற்கமைய, கல்முனை மாநகர சபைக்காக TaxMan எனும் மென்பொருளொன்று மருதமுனையினைச் சேர்ந்த Titum எனும் நிறுவனத்திடமிருந்து 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டு, 2020 ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவித பகிரங்க விலைமனுக் கோரலும் மேற்கொள்ளப்படாமலேயே இந்த மென்பொருள் பொதுமக்களின் பணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது போன்ற மென்பொருளொன்றினை இலவசமாக வழங்குவதற்காக ஆசிய மன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கல்முனை மாநகர சபையினால் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Titum நிறுவனத்தின் சார்பில் மருதமுனையைச் சேரந்த ஏ.கே. காமிஸ் என்பவரே இந்த மென்பொருளுக்கு பொறுப்பாக இருந்துள்ளார். மேற்படி காமிஸ், Titum நிறுவனத்திலிருந்து தற்போது விலகியுள்ளார்.

இவ்வாறான நிலையில் Titum நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மென்பொருளுக்கான விளக்கத்தை Syntaks எனும் நிறுவனத்தின் கடிதத் தலைப்பில், நிதி மோசடி தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகளின் போது – காமிஸ் வழங்கியுள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்படுகின்ற வரிப் பணத்தினை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இந்த மென்பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள விடயம், தற்போது மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் போது – ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும்,’மக்களிடமிருந்து இலகுவாகவும், முறையாகவும் வரிப் பணத்தினை அறவீடு செய்யும் நோக்கிலேயே இந்தமென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதே தவிர கொள்ளையடிக்கும் நோக்கிலல்ல’ என, கல்முனை மேயர் றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், இந்த நிதி மோசடியுடன் – தான் இணைக்கப்படுவதாக குறிப்பிட்ட கல்முனைமேயர், ‘குறித்த நிதி மோசடிக்கும் தனக்கும் எந்தவிததொடர்புமில்லை’ என்றார்.

இந்த நிதி மோசடிதொடர்பில் கிழக்கு மாகாணசபையினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு – முழு ஒத்துழைப்பினையும் வழங்கி வருகின்றேன்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டுகொள்ளாத ஹக்கீம்

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்முனை மாநகர சபையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆயினும் இந்த மோசடி தொடர்பாக, மேற்படி கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதுவரை எந்தவித அறிக்கைகளயும் வெளியிடாமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்ர வூப் ஹக்கீமினை தொடர்பு கொண்டு, இது குறித்து வினவியபோது, ‘எமது கட்சியின் உறுப்பினர்கள் யாராவது இந்த நிதிமோசடியுடன் தொடர்புபட்டிருந்தால் எந்தவித பாரபட்சமுமின்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிதி மோசடி தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு கல்முனை மேயருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

இந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பலர் – இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

அவர்களை பாதுகாப்பதற்காக, அரசியல் மற்றும் பிரதேசவாத சாயம் பூசி – தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேயர் றகீப்
வேலைத் தொழிலாளிக்கு நிதிப்பிரிவில் கடமை வழங்கிய கடிதம்
மென்பொருளை வழங்கிய நிறுவனத்தை விடுத்து வேறு நிறுவனம் வழங்கிய கடிதம்.

நன்றி: புதிது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »