Our Feeds


Thursday, March 16, 2023

News Editor

ஒரு நாள் பணிப்புறக்கணிப்பினால் நாட்டுக்கு இழப்பு எவ்வளவு தெரியுமா?


 அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை இன்று (16) முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 


எரிபொருள், துறைமுகங்கள், சுகாதாரம், பாடசாலைகள், வங்கிகள் மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் நேற்று (15) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன. 

இதனால் சில துறைகளின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களும் பாதிக்கப்பட்டனர். 

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொழில்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் சங்கங்களும் இன்று முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் கிடைக்காமையால், தமது தொழில்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக பல்கலைக்கழக கலாநிதி சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

நேற்று இரவு கூடிய சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னெஹக்க தெரிவித்தார். 

இதேவேளை, நேற்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக மொத்த தேசிய உற்பத்திக்கு 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வது இலகுவான விடயமல்ல என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »