Our Feeds


Saturday, March 25, 2023

Anonymous

கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ சைவ மதத்தினரை மதம் மாற்ற முயன்றால் விரட்டியடிப்போம் - மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை

 



சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் ,

இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை  பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர். 

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரின் வருகைக்கு பின்னர் தற்பொழுது, கிட்டத்தட்ட 300, 400 மதமாற்று சபைகள் சைவர்கள் மத்தியில் உலா வருகின்றன.

இந்த மண்ணின் மரபான சைவ சமயத்தினை அழிக்க ஒரு போதும் விட மாட்டோம் என்பதுடன் பாம்புகள், மரங்கள், நாய்கள், எலிகள் மற்றும் வேம்புகள் என எமது மரபுகளும் உரிமைகளுமானவற்றினை வெளிவிடுவோம். இவற்றினை சாத்தான்கள் என கூறுவதற்கு நீங்கள் யார்?

2019 ஆண்டு கல்முனை மற்றும் யாழ்ப்பாணத்தில் கூட்டங்களில் பேசுவதற்காக வருகை தந்த ஒருவரும் காவல்துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். 

தற்பொழுது தமிழகத்தின் காரூண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் போல் தினகரன் மதமாற்றம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வந்துள்ளார். 

தூண்டிலிட்டு மீனை பிடிப்பது போன்று அவரை வைத்து மதமாற்றம் செய்யலாம் என இங்குள்ள சபைகள் கனவு காண்கின்றன அவை தகர்த்தெறியப்படும்.

சுற்றுலா, மாணவர், வணிகம் மாற்றும் தொழில் புரிதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை தர முடியும் என்பதுடன் அவ்வாறு வருகை தருபவர்கள் மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என்பது இலங்கையின் எழுதப்பட்ட விதி, மீறி செயற்பட்டால் பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட முடியும். 

போரிற்கு பின்னர் கடந்த 13 ஆண்டுகால இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். 

விடுதலை புலிகள் காலத்தில் அவர்கள் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதுடன் அவர்களும் சைவர்களின் கொள்கையான அகம் தான் மதம் என்பதுடன் நம்பிக்கை எனவும் கூறினார்கள். 

சிலுவைகள், புத்த விகாரைகள் போன்றன ஆக்கிரமிப்பு சின்னங்கள் மற்றும் உள்ளங்களை மாற்றுவதாக கூறி மதமாற்றுதல்களை மேற்கொள்கின்றனர். 

கடந்த ஆண்டுகளாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபவர்களை தடுத்து வருவதுடன் ஏறத்தாழ 40 கூட்டங்களை நிறுத்தியுள்ளோம். மதமாற்றம் நோக்குடன் யாரும் இங்கு வருகை தர வேண்டாம். 

கிறிஸ்தவர்கள் மற்றும் முகமதியர்கள் உங்களது மதம் சார்ந்து தனிப்பட்ட வழிபாடுகளை தாராளமாக மேற்கொள்ளுங்கள் மாறாக சைவ சமயத்தவர்களை மதமாற்றும் நோக்கில் வருகை தந்தாலோ துண்டுப்பிரசுரங்கள் விநியோம் செய்தாலோ அல்லது கூட்டங்கள் நடத்தபட்டாலோ விரட்டியடிக்கப்படுவீர்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »