Our Feeds


Friday, March 10, 2023

News Editor

மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்


 இலங்கை மின்சார சபையில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக காலதாமதமான 36,000 புதிய மின்சார இணைப்புக்களையும் 6 வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார். 


தற்போதுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்திருப்பதால் மின்சார சபையின் நிதிப் பிரிவைப் பலப்படுத்தியதன் மூலம் புதிய இணைப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

புதிய மின்சார இணைப்புகளைப் பெறுவதற்கு பெருமளவிலானவர்கள் பதிவுசெய்துள்ள போதிலும் இணைப்புகளை வழங்குவதில் பாரிய காலதாமதம் ஏற்படுவதாக உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அத்துடன், இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் செலவீனங்களை முடியுமானளவு கட்டுப்படுத்துவதற்கு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

QR குறியீட்டின் மூலமான எரிபொருள் கோட்டாவைப் புதுப்பிப்பதற்கான தினம் செவ்வாய்க்கிழமையாக மாற்றப்பட்டிருப்பதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பணியாற்றும் எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவான 20 மில்லியன் ரூபாவை சேமிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

அத்துடன், இந்த நிறுவனங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டாது எனவும், தற்போது பணிபுரியும் ஊழியர்களின் நிர்வாகத்தினூடாக செலவுகள் முடிந்தவரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபை பகுதியில் இதன் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், 31000 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் முறையில் மின்சாரச் சிட்டைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

அதன்படி, வாடிக்கையாளர் மின்சாரச் சிட்டைகளை குறுஞ்செய்தி மூலம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார். 

மேலும், 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2313/47 ஆம் இலக்க மற்றும் 2313/47 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நாளக பண்டார கோட்டேகொட மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »