மலையக தோட்ட பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் நிவாரணம் வழங்கலில் பாரபட்சம் காட்ட வேண்டாம் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
“அரசாங்கம் நிவாரண திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அதன்போது, நிவாரணம் வழங்கலில் பாரபட்சம் காட்ட வேண்டாம். மலையக தோட்ட பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் மூலம், நாட்டில் நிதியை திரட்டிக்கொள்வதற்கான பல்வேறு வழிகள் திறக்கப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து ஒரு சில படிகள் மீண்டெழுந்திருக்கின்றது.
உண்மையாகவே வறுமைநிலைக்கு உட்பட்டிருக்கின்ற குடும்பங்களை இனங்காண வேண்டும். வெறுமனே, சமூர்தி பெரும் குடும்பங்கள் மட்டும் வறுமை நிலையில் உள்ளது என கொண்டு நிவாரணங்கள் வழங்குவது பொருத்தமற்றது.
சமூர்தி வழங்கல் தொடர்பான நியதிகள் காரணமாக தோட்ட பகுதியில் உள்ள மக்கள் மிக குறைந்த அளவிலேயே உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும், நாட்டின் வறுமை நிலை மிக உயர்வாக இருப்பது மலையக தோட்ட பகுதிகளில் என்பதனை புள்ளி விபரங்கள் தெளிவாக காட்டுகின்றது.
எனவே, கிராமப்புரங்களை போல் தோட்ட பகுதிகளுக்கும் பாராபட்சம் இன்றி நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தற்போது 10 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மலையக தோட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
தோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குடும்பங்களுமே இன்று வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான சூழலில் தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவது பொருத்தமற்றது.
அது மட்டும் அன்றி மக்களின் அதிருப்த்தி பல்வேறு தரப்பினர் இடையில் மோதல் நிலையை தோற்றுவிப்பதாகவும் அமைந்துவிடும். எனவே, மக்களின் உண்மை நிலையை அறிந்து மனிதாபிமான அடிப்படையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். R