சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளுர் சநதையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன.
அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும் சந்தையில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையில், கட்டாயமாக மாபிள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீன் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறியுள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால், முன்னர் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தவர்கள், தற்போது தங்களது தொழிலை மீள ஆரம்பித்துள்ளனர்.
இதனால், கடலுணவுகள் அதிகளவில் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிற்றுண்டிகளின் விலைகள், நாளைய தினம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் இலாபத்தை, பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பிஸ்கட்டுகள், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களின், அதிகரிக்கப்பட்ட விலைகளை, இந்த வாரத்தில் குறைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.