Our Feeds


Sunday, April 23, 2023

ShortTalk

நெடுந்தீவு படுகொலை - பிரதான சூத்திரதாரி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!



நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.



கைதானவர் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களும், ஒருவர் படுகாயமுற்ற நிலையிலலும்

 மீட்கப்பட்டனர்.


வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (83), அவரது சகோதரியான முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை சேர்ந்த பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (76), அவரது கணவர் நாகநாதி பாலசிங்கம் (82), வீட்டு உரிமையாளரின் மற்றொரு சகோரியான பிரித்தானியாவிலிருந்து வந்த வேலாயுதம் பிள்ளை நாகரத்தினம் (78), அவர்களின் உறவினரான சுப்ரமணியம் மகாதேவா (74) ஆகியோரே கொல்லப்பட்டிருந்தனர்.


கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நெருங்கிய குடும்ப உறவினர்கள்.


அங்குள்ள சிவன் ஆலயமொன்றின் கும்பாபிஷேகத்திற்காக அவர்கள் வந்திருந்தனர். பிரித்தானியாவிலிருந்து வந்து முல்லைத்தீவு பாண்டியன்குளத்தில் தங்கியிருந்தவர், அங்கிருந்த உறவினர்களுடன் நெடுந்தீவிற்கு வந்திருந்தார்.


இந்த கொலை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சந்தேக நபர் நேற்றிரவே புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்டார்.


புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த சபாரத்தினம் ரகு என்ற 50 வயதானவரே கைது செய்யப்பட்டார். அவரது தந்தையார் குறிகட்டுவானை சேர்ந்தவர். தாயார் குருநாகலை சேர்ந்தவர்.


கைதானவர் நீண்டகாலம் ஜேர்மனியில் வசித்தவர். குற்றச்செயல் காரணமாக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர். ஹெரோயின் பாவனையாளர். தொடர் ஹெரோயின் பாவனையால் இயல்பு நிலையில் இல்லாதவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, நீண்டகால பகையை தீர்க்க இந்த கொலையை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொலையின் பின்னர், 40 பவுண் தங்க நகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார். நகைகளும் கைப்பற்றப்பட்டன.


நீண்டகால பகையென சநதேக நபர் முன்னர் குறிப்பிட்ட போதும், திருட்டு நோக்கத்திற்காகவே கொலை நடந்திருக்கலாமென கருதப்படுகிறது.


சந்தேக நபர் குற்றச்செயல் காரணமாக ஜேர்மனியிலிருந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு, வவுனியாவில் சில காலம் உறவினர்களுடன் தங்கியிருந்து விட்டு, யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.


குறிகட்டுவானிலுள்ள தெரிந்தவர் ஒருவரின் விடுதியில் தங்கியிருந்தார். நீண்டகாலமாக பணம் கொடுக்காததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் தங்கியிருந்துள்ளார். நெடுந்தீவில் கொலை நடந்த வீட்டு உரிமையாளர் பெண்ணுடன், சில வாரங்களின் முன் அறிமுகமாகி அங்கு சென்று வந்தார். அந்த வீட்டு பெண்ணுக்கு தேவையான சில வேலைகளை செய்து கொடுத்து பணம் பெற்று வந்தார்.


நெடுந்தீவில் கொலை நடந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கொலை நடந்த அன்றும் அவர் வீட்டில் தங்கியுள்ளார்.


கொலை நடந்த வீட்டிற்கு அயலில் உள்ளவர்கள், அந்த வீட்டிற்கு வந்து தங்கிச் செல்லும் நபர் பற்றி சந்தேகமடைந்து, புங்குடுதீவிலுள்ள நண்பர்களிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.


இதனடிப்படையில் புங்குடுதீவு இளைஞர்கள் நேற்றிரவு 8 மணியளவில் சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். சந்தேகநபர் தப்பியோட முயற்சித்த போது, இளைஞர்கள் அவரை விரட்டிப்பிடித்து, கயிற்றால் கட்டி வைத்து, பொலிசாருக்கு அறிவித்த பின்னர் பொலிசார் சந்தேகநபரை பொறுப்பேற்றனர்.


சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


வீட்டு நாய் குரைத்து சத்தமிட, நாயையும் வெட்டியுள்ளார். நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது.


இந்த சமயத்தில், அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும், அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.


கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


நேற்று காலை புங்குடுதீவு சென்று, அங்கிருந்த மதுபான விடுதிக்கு சென்று, மதுபானம் வாங்கி அருந்தியுள்ளார்.


விசாரணையின் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல பேசி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


ஊர்காவற்துறை பொலிசாரிடம் கொலை செய்ததாக ஒப்புதல் தெரிவித்த நபர், தற்போது முரணாக பேசி வருகிறார். விசாரணையாளர்களிடம், “நானா கொலை செய்தேன்“ என்றும், “நான்தான் கொலை செய்திருக்க வேண்டும்… என்ன?“, “கத்தி என்னுடையதுதான்… திடீரென பார்த்தேன், கத்தியில் இரத்தம்… நான் பயந்து விட்டேன். ஓடிப்போய் கிணற்றுக்குள் போட்டு விட்டேன்“ என முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.


இது குறித்த அடுத்தக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »