யாழ்ப்பாண மக்கள் வெற்றிலைக்கு பயன்படுத்தும்
சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் அப்பல்கலைக்கழக இளநிலை இறுதியாண்டு மாணவர் ஒருவர் நடாத்திய ஆய்விலையே இந்த விடயம் வெளிவந்துள்ளது.
2019 ஆண்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வாய்ப்புற்று நோயாளிகள் மற்றும் வாய்ப்புற்று நோய் மரணங்கள் என்பன யாழ்ப்பாணத்தில் அதிகம் பதிவாகியுள்ளன.
அந்நிலையில் மாணவர் ஒருவர் அது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தார். அதன் ஒரு கட்டமாக வெற்றிலை போடும் போது , அதனுடன் பாவிக்கும் சுண்ணாம்புகளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பெறப்பட்டு அதன் மாதிரிகளை ஆய்வு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் , பரிசோதிக்கப்பட்ட சுண்ணாம்பு மாதிரிகளில் புற்றுநோய்களை உண்டாக்க கூடிய "ரோடமைன் - பி" என்ற கூறுகள் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன் , இந்த வகை சுண்ணாம்புகளை உடனடியாக சந்தை விற்பனையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பில் மாத்திரமே இந்த கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.