Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

SLPP பதவியிலிருந்து GL நீக்கம் | நீதிமன்றத்தை நாடும் உரிமை அவருக்கு உண்டு, மனசாட்சிப்படி அவர் நடக்க வேண்டும் - அமைச்சர் பிரசன்ன



(எம்.மனோசித்ரா)


பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பிற்கமையவே தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் அவர் மனசாட்சியுடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொலவில் அமைந்துள்ள மறைந்த அரசியல்வாதி ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்தில் அவரது 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் பதவியை மாற்றத் தயார் என கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். இது எதிர்க்கட்சியினரால் தயாரிக்கப்பட்ட கதையாகும்.

பொதுஜன பெரமுனவுக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை. நாட்டுக்கு தேவையான தீர்மானத்தையே எந்த சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன எடுக்கும்.

கட்சி யாப்பின் பிரகாரம் வருடாந்தம் பொதுச்சபை கூட்டப்பட்டு  முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதற்கமைய கட்சி விவகாரங்களிலிருந்து விலகியிருக்கும் ஜீ.எல்.பீரிஸ் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது அவரது உரிமையாகும். எவ்வாறிருப்பினும் அவர் மனசாட்சியின் பிரகாரம் செயற்படுவார் என்று நம்புகின்றோம்.

பொதுஜன பெரமுனவுக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமை வதந்திகளாகும். பலமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு பாராளுமன்றத்தில் பெருமளவானோர் எம்முடன் இணைந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியளவு பெரும்பான்மை எம்வசமுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »