Our Feeds


Wednesday, April 5, 2023

Anonymous

SLPP யை உடைக்க சூழ்ச்சி நடக்கிறது - மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்தும் செயல்படுவோம் - சாகர காரியவசம்!

 



(இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கட்சியை மறுசீரமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்து செயற்படுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் புதன்கிழமை (5) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில்,

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர நாட்டுக்கு தீங்கிழைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எம் மத்தியிலும் விமர்சனங்கள் உள்ளன. கடந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் தற்போது தூய்மையானவர்கள் போல் அரசியல் செய்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கடுமையான நிபந்தனைகளை கட்டாயம் செயற்படுத்த வேண்டும் என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவில்லை.

நாணய நிதியத்தை நாடினால் அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று அரசாங்கத்துக்குள் கடுமையாக எதிர்ப்புக்கள் எழுந்தன.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கக்கூடிய அவதானம் செலுத்தினோம். தேசிய வளங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு அரசாங்கத்துக்குள் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் சகல திட்டங்களுக்கும் ஆளும் தரப்பினரே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பொருளாதார பாதிப்பு தீவிரமடையும்போது ராஜபக்ஷர்களை மாத்திரம் குற்றவாளியாக்கிவிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது ஒன்றும் அறியாததை போல் கருத்துரைக்கிறார்கள். நாட்டு மக்கள் இவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தியதை போன்று தற்போது பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து சவால்களையும் நிச்சயம் முறியடிப்போம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை கட்சி கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

கட்சியை மறுசீரமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்து செயற்படுவோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »