Our Feeds


Monday, May 15, 2023

ShortTalk

2024 இல் ரனில் ஜனாதிபதி, பசில் பிரதமர் - ரத்ன ஹிமி கருத்து!



(இராஜதுரை ஹஷான்)


2024 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதி, பஷில் ராஜபக்ஷ பிரதமர் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான தரப்பினர் செயற்படுகிறார்கள்.

இவ்விருவரின் ஆட்சியை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என மேலவை இலங்கை கூட்டணியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மேலவை இலங்கை கூட்டணி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எவரும் அரசாங்கத்தை ஏற்க முன்வரவில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக புறக்கணித்த பின்னணியில் ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட ராஜபக்ஷர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்துக்குள் நான்கு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

முதலாவது தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,இரண்டாவது தரப்பினர் பஷில் ராஜபக்ஷவுக்கும்,மூன்றாவது தரப்பினர் நாமல் ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,நான்காவது தரப்பினர் பஷில் ராஜபக்ஷ உட்பட நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பாடும் நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிக்கவும்,அதே ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பஷில் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

நாடு ஏன் வங்குரோத்து நிலை அடைந்தது,பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்களின் வகிபாகம் என்னவென்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே 2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் செய்த தவறை மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »