Our Feeds


Saturday, May 20, 2023

ShortTalk

ஒரு நாளைக்கு 300 - 400 டெங்கு நோயாளர்கள் பதிவு ; இதுவரையில் 23 மரணங்கள்.



(எம்.மனோசித்ரா)


நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 300 - 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அதிகரிப்பைக் காண்பிக்கிறது. மேல் மாகாணம் உட்பட மேலும் சில மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை (நேற்று வரை) நாடளாவிய ரீதியில் 35,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை மேல் மாகாணத்தில் இனங்காண்பட்டுள்ள மொத்த நோயாளர்களில் 22 சதவீதமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு மற்றும் கம்பஹா என்பன அடுத்தடுத்த இடங்களிலுள்ளன.

இவ்வாண்டில் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய இம் மாகாணத்தில் 7 மரணங்களும் , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா 4 மரணங்களும் , தென் மற்றும் மத்திய மாகாணங்களில் தலா 3 மரணங்களும் , வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தலா ஒவ்வொரு  மரணங்களும் பதிவாகியுள்ளன.

25 - 49 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய 25 - 49 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 12 பேரும் , 5 - 9 வயதுக்குட்பட்டவர்களில் இருவரும் , 15 - 19 வயதுக்கிடைப்பட்ட ஒருவரும் , 20 - 24 வயதுக்குட்பட்டவர்களில் நால்வரும் , 50 - 64 வயதுக்கிடைப்பட்டவர்களில் இருவரும் , 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருவரும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

இம் மாதத்தில் 19 நாட்களுக்குள் 5,575 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி - மே மாதங்களுக்கிடையில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களை விட , இது பன்மடங்கு அதிகரிப்பைக் காண்பிக்கிறது. அண்மையில் நாட்டில் நிலவிய அதிக மழையுடனான காலநிலை இதற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 300 - 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் நிலைமை காணப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் மழைக் காலம் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் தமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதோடு, தம்மையும் பாதுகாத்துக் கொள்வதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேல் மாகாணத்துக்கு அப்பால் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் வழமைக்கு மாறான டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இதே வேளை காலி, இரத்தினபுரி, கண்டி, குருணாகல், கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

காய்ச்சல் , உடல் சோர்வு , வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் , குறிப்பாக டெங்கு அபாய வலயங்களில் வசிப்பவர்கள் மற்றும் கர்பிணிகள் , குழந்தைகள், முதியவர்கள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதமின்றி வைத்தியசாலையை நாட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »