Our Feeds


Tuesday, May 2, 2023

ShortTalk

32 ஆயிரம் பெண்கள் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்களா? ஆதாரத்துடன் நிரூபித்தால் 1 கோடி பரிசு - “தி கேரளா ஸ்டோரி” திரைப்பட இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு சவால்!



‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தால் ரூ.1.11 கோடி பரிசு வழங்கப்படும் என்று கேரள முஸ்லிம் அமைப்பு மற்றும் ஒரு வழக்கறிஞர் அறிவித்துள்ளனர்.


விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. 

இந்த திரைப்படத்தில் கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ஆகும். அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறு பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சங் பரிவார் ஆதரவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இது உண்மை என்றும் வாதிடுகின்றனர். கடத்தப்பட்ட பெண்களின் முகவரியை கொடுங்கள் என்று கேட்டால் மவுனம் காக்கின்றனர்.

நாங்கள் ஒரு சவாலை முன்வைக்கிறோம். நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அவ்வாறு நிரூபிக்கும் நபருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். எங்களது மாவட்ட அலுவலகங்களில் மே 4-ம் தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் உண்மைத்தன்மையை நிரூபித்து பரிசை பெற்றுச் செல்லலாம்.

இவ்வாறு முஸ்லிம் இளைஞர் லீக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவை சேர்ந்த வழக்கறிஞரும் நடிகருமான ஷுக்கூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “தி கேரளா ஸ்டோரி முன்னோட்டத்தில் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 32 பெண்கள் நாடு கடத்தப்பட்டதை நிரூபித்தால் ரூ.11 லட்சம் பரிசாக வழங்குவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »