(ஆர்.ராம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இதயசுத்தியுடன் அழைப்பு விடுத்தால் நாம் அதில் பங்கேற்பதற்கு தயாராகவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரியிடம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த்தரப்புக்களை அழைத்துள்ளமை தொடர்பாகவும் தமிழ் முஸ்லிம் தரப்புக்களுக்கு இடையிலான சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பிலும் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் எமக்கு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் அதில் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளோம்.
குறிப்பாக, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் காண்பித்து அதன் ஊடாக தோதல் அரசியல் நன்மைகளை அடைவதற்கான முனைப்பினைச் செய்வது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்க வேண்டும்.
தற்போது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளது. இந்த நிலைமையிலிருந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் அனைத்து சமூகங்களினதும் ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றது. இந்தப் புரிதல் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இனவாதிகளும் அடிப்படைவாதிகளும் தற்போது மௌனித்துப்போயிருக்கின்ற தருணமாகவும் உள்ளது. அத்துடன், கடும்போக்கு அரசியல் வாதிகளையும் ஜனாதிபதியின் தலைமைத்துவமே கையாள்கின்றது.
ஆகவே தற்போது ஏற்பட்டிருக்கின்ற தருணமானது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பொருத்தமானதொரு தருணமாகும் என்றே நாம் கருதுகின்றோம். அவ்வாறான நிலையில் தற்போதைய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நீடித்துக்கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
ஆனால்ரூபவ் அண்மைய காலத்தில்ரூபவ் இந்த நாட்டில் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக தம்மைக் கருதுகின்ற சிங்கள, பௌத்த அடிப்படைவாதத்தில் மூழ்கிப்போயிருக்கின்ற சில தேரர்களும் அரசியல்வாதிகளும் அவ்வப்போது, கிளர்ந்தெழுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றது.
இவர்கள் போலியான பிரசாரத்தினை முன்னெடுத்து வீணாண பிரச்சினைகளை மீண்டும் தோற்றுவிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள்.
குறிப்பாக, அதியுச்சமான நற்சிந்தனைகளை அருளிய கௌதம புத்தபெருமானை எல்லைக்கற்கள் போன்று பயன்படுத்தி இந்த நாடு பௌத்த நாடு. அது சிங்களப் பெரும்பான்மையினருக்கே சொந்தமானது என்ற தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்ல சில விடயங்களை முன்னெடுத்தாலும் இனவாத, அடிப்படைவாத சக்திகள் மீண்டும் பூதாகரமாக தலைதூக்குவதற்கு இடமளிப்பதானது அனைத்தையும் சீர்குலைத்துவிடும்.அதுமட்டுமன்றி அவர் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தாது.
ஆகவே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த விடங்களை முளையிலேயே களைந்துவிடுவது பொருத்தமானதாகும் என்றார்.
தமிழ்த் தரப்புக்கள் பிரிந்திருப்பது துரதிஷ்டம்
இவ்வாறான நிலையில் தமிழ் தலைமைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்து இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் வினவியபோது, பதிலளித்த ஹக்கீம், தமிழ், மக்களுக்கும் முஸ்லிம்மக்களுக்கும் இடையிலான காணப்படுகின்ற சில நெருடல்களுக்கு இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வுகளை காண வேண்டும்.
தேர்தல் அரசியலுக்கு அப்பால் இந்த விடயத்தில் உள்ள யதார்த்தங்களை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், சம்பந்தன் அவர்களுடன் தொடர்ச்சியாக பலசுற்றுப்பேச்சுக்களை முன்னெடுத்து வந்துகொண்டிருந்தோம். எனினும், அவருடைய முதுமை காரணமாக அச்செயற்பாடுகளை தொடரமுடியாதவொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவருடைய காலத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களினது விவகாரங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகவுள்ளது.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தரப்பினரும், ஏனைய தமிழ்த் தரப்புக்களும் பிரிந்து நிற்பது துரதிஷ்டமானதொரு நிலைமையாக உள்ளது. இந்த நிலைமைகளும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது என்றார்.