Our Feeds


Sunday, May 28, 2023

ShortNews Admin

ஈஸ்டர் தாக்குதல் | தப்புல லிவேராவின் கருத்தை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு!



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை (PSC) நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். 

டி லிவேரா ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், 2021 மே 17 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாக அந்த நேர்காணலில் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார்.

அத்துடன் நௌபர் மௌலவி என்பவர், இந்த சதியில் முக்கியப் பங்காற்றியதாகவும், அவரே மூளையாக செயல்பட்டார் என்று உறுதியாகக் கூற முடியாது என லிவேரா கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சஹ்ரான் ஹாஷிம் - தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த முடிவு செய்திருந்தாலும் - சதியில் ஒரே ஒருவர் மட்டுமே ஈடுபட்டார் என்றும் அவர் குறித்த நேர்காணலின்போது கூறியிருந்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபராக இருந்த டி லிவேரா அனைத்து விசாரணை கோப்புகள், ஆதாரங்கள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிற தகவல்களை நேரடியாக கையாண்டார்.

எனவே தாக்குதல்கள் பற்றி அவருக்கு - இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் ஏதாவது தெரிந்திருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக சபாநாயகரிடம் கடிதத்தை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் அவரது அறிக்கைகள் மற்றும் அவற்றின் அடிப்படையை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆகவே முன்னாள் சட்டமா அதிபரின் கருத்துக்கள் குறித்து நாடாளுமன்றில் அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, 15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.

அத்துடன் அந்த குழுவின் அறிக்கை, இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகின்றனர்.

முன்னதாக, தமது கருத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, தப்புல்ல டி லிவேரா, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன்படி நீதிமன்றமும் அவரை கைது செய்து விசாரணையை மேற்கொள்வதற்கு ஜூன் 22 வரை இடைக்கால தடையை விதித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »