நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மானிப்பாய் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 29 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - வெலிகண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் 33 வயதான மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி - கம்பளை, குருகேலே சந்தியில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வேன் மோதியதில் 68 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் - ஸ்வஸ்திபுர பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 76 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்தனர்.