போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1.3 மில்லியன் ரூபா பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று வழக்கு விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்ற அனுமதி அளித்தது.