Our Feeds


Thursday, May 4, 2023

ShortTalk

சட்டவிரோத விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக போராட்டம் - பொலிசார் வருகை!



யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று தொடர் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.


வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் நேற்று பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

14 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த தொடர் போராட்டம் நாளை வரையில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விகாரைக்கு முன்பாக பந்தல் ஒன்றை அமைக்கப்பட்ட போது, அங்கு பிரவேசித்த காவல்துறையினர் அதனை தடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் காணியொன்றில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது, அதனை அகற்றுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்த போது, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக அந்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »