Our Feeds


Friday, June 9, 2023

ShortNews Admin

பிறந்து 15 நாட்களேயான குழந்தைக்கு குரங்கம்மை தொற்று - வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் - சுகாதார அமைச்சு முக்கிய அறிவிப்பு



நாட்டில் தற்போது குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட பிறந்த 15 நாட்களேயான சிசு உட்பட நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சமூகத்துக்கு எவ்வித அச்சுறுத்தலுமில்லை என்பதால் வைரஸ் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம்’’ என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவிக்கையில்,


குரங்கம்மை வைரஸ் இலங்கையில் தோன்றியதல்ல. ஆகையால் இது சமூக பரவலை ஏற்படுத்தும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை.


பாதிக்கப்பட்ட நோயாளிகள் சமூகத்தில் வெளிப்படுவதை தடுக்க அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆதலால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றார்.


இதேவேளை, வெளிநாட்டுகளிலிருந்து நாடு திரும்புவோர் குரங்கம்மை அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) பணிப்பாளர் டொக்டர் தினேஷ் கொக்கலகே தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் டுபாயிலிருந்து நாடுக்கு திரும்பிய தாய் மற்றும் மகள் உட்பட மேலும் இரு குரங்கம்மை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அத்தோடு நேற்றுமுன்தினம் (07) நாட்டுக்கு வருகை தந்த பிலிப்பைன்ஸ் பிரஜையான பெண்ணொருவரும் அவரது மகளும் குரங்கம்மை காய்ச்சலுக்குள்ளாகியுள்ளனர்.


குறித்த பெண்ணுக்கு அவரது கணவனிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


அந்தவகையில் நாட்டில் தற்போது குரங்கம்மை வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு நேற்றுமுன்தினம் (07) தெரிவித்துள்ளது.


டுபாயிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த தாயொருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் அவரது குழந்தை குரங்கம்மை வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கடந்த 4ஆம் திகதி லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.


தற்போது குரங்கம்மை பாதிக்கப்பட்ட இருவரும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


இலங்கையில் முதலாவது குரங்கம்மை தொற்று கடந்த 2022 நவம்பர் 4ஆம் திகதி பதிவாகியிருந்தது. டுபாயிலிருந்து நவம்பர் முதலாம் திகதி நாடு திரும்பிய 20 வயதுடைய இளைஞரொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.


இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார்.


எம்பொக்ஸ் எனப்படும் குரங்கம்மை வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இது ஒரு வைரஸ் தொற்றாகும். வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தொட்ட பொருட்கள் மற்றும் மேற்பரப்புகளிலிருந்து சமூகத்துக்கு பரவுகிறது.


உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றின்படி குரங்கம்மை வைரஸ் தொற்றின் அறிகுறிகள் 2 முதல் 3 வாரங்கள் நீடிக்கும். இது காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய சுரப்பிகள் (நிணநீர் முனைகள்) ஆகிய ஆரம்ப அறிகுறிகளுடன் ஆரம்பிக்கலாம். அத்துடன் அரிப்புடன்கூடிய கொப்புளங்கள் அல்லது புண்கள் தோன்றுதல், அவை முகம் உள்ளங்கைகள், பாதம், இடுப்பு பிறப்புறுப்பு மற்றும் குதப் பகுதிகளை பாதிக்கலாம். இந்த புண்கள் வாய், தொண்டை, ஆசனவாய், மலக்குடல் அல்லது கண்களில் கூட காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »