இந்தியாவில், வட மாநிலங்களில் பருவமழை
பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், இராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.
டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 8 ஆம் திகதி கனமழை பெய்தது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,
நேற்று முன்தினம் காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் டெல்லி மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் கனமழை பெய்தது. கார்யூக் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், 450 ஆண்டுகால கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. வேறு சில வீடுகளும் பாதிப்படைந்துள்ளன.
இந்த பகுதியில், 9 மணிநேரத்தில் 14.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மேகவெடிப்பு ஏற்பட்டபோது கூட இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த முறை பழைய கட்டிடங்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடமாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இமாசல பிரதேசத்தில் மண்டி, கிண்ணார் மற்றும் லஹால்-ஸ்பிடி நகரங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. டெல்லியில் யமுனா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் செல்கிறது.
இதனால், நீர்மட்டம் 206.24 மீற்றராகவுள்ளது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்துள்ளது. இதில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக வருகிற 13 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடும்படி பஞ்சாப் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு காணப்படுகின்றன. கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கியும், அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளிவந்துள்ளன.
இதனால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
.jpg)