கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி, குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் செல்வதாக கூறிய பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு வரவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி அம்பிட்டிய வீதியில் அமைந்துள்ள தங்குமிடமொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி குறித்த வௌிநாட்டு பெண் வந்துள்ளதாகவும், கடந்த 10 ஆம் திகதி காலை முதல் அவர் தங்குமிடத்தில் இருக்கவில்லை என நேற்று (13) முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்தபிட்டிய பிரதேசத்திலுள்ள அலகல்ல மலையில் ஏறப் போவதாக தங்குமிடத்திலுள்ள ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இன்று (14) அலகல்ல கந்த பிரதேசத்தில் அவரது சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலகல்ல மலைப் பகுதியில் உள்ள பாறையில் இருந்து 32 வயதுடைய டென்மார்க் பெண் வழுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி மற்றும் பொத்தபிட்டிய பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
.jpg)