Our Feeds


Saturday, July 29, 2023

SHAHNI RAMEES

நாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா...!

 

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார் .

வெள்ளிக்கிழமை (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுடன்20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் வந்தடைந்தனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் 06 நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்ததுடன், இந்த குழுவினர் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை ( 07/29 இரவு) திரும்பவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் உயர் மட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளது. 

இதன் போது கொழும்பில் இலகு ரயில் சேவை திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட  பல புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.  

இலங்கையின் நீண்ட கால நட்பு நாடான ஜப்பான்  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் அதிருப்திக்கு உள்ளானது. 

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்தை தன்னிச்சையாக இரத்து செய்தமையானது ஜப்பான் - இலங்கை உறவில் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அண்மைய ஜப்பான் விஜயத்தின் போது, அங்கு முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட  கலந்துரையாடல்களின் பின்னர் இருதரப்பு உறவுகளில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

ஜப்பான் உட்பட எந்தவொரு நட்பு நாடுகளுடனான ஒப்பந்தங்களையும்  அமைச்சரவை  அனுமதியின்றி நிறுத்துவதற்கு இனிவரும் காலங்களில் இடமளிக்காது இருக்கும் வகையில் சட்டங்கள்  உருவாக்குவதாக இதன் போது ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்தார்.  

தற்போது ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கைகளின் அப்படையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாகவே ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த விஜயமானது இலங்கைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »