கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கிவரும் மிகையான பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தியுள்ளார்.
கனேடிய தமிழர் பேரவையினால் தொடர்ந்து 15ஆவது ஆண்டாக இவ்வருடம் நடத்தப்படவுள்ள 'கனேடியத் தமிழர் நிதிசேர் நடை' மற்றும் அதனூடாகத் திரட்டப்படும் நிதியின் மூலம் வழங்கப்படவுள்ள உதவி என்பன பற்றித் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, மரதா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தினார்.
அதன்படி, முதலில் கனேடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் பற்றிக் கருத்து வெளியிட்ட அவர், அப்பேரவை தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி உண்மையான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்மக்கள் அந்நாட்டின் மேம்பாட்டுக்கு பெருமளவான பங்களிப்பை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், அதன் நீட்சியாக கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் தமிழர் இடம்பிடித்திருப்பது குறித்தும் பிரஸ்தாபித்தார்.
அதேவேளை இலங்கையுடன் கனடா மிகநெருக்கமாகப் பணியாற்றிவருவதாகவும், அனைத்து வழிகளிலும் இலங்கை நன்மையடைவதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி கனேடியப்பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை நினைவுநாள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட எரிக் வோல்ஷ், இலங்கை நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கிப் பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கையால் அதனைச் செய்யமுடியும் என்றும், ஏனெனில் இலங்கையிடம் பல்வேறு நேர்மறையான கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
