Our Feeds


Friday, July 14, 2023

SHAHNI RAMEES

ஹஜ் நிதியத்திலிருந்து பணம் அவசியமின்றி செலவிடப்படவில்லை - ஹஜ் குழுத் தலைவர் விளக்கம்

 

ஹஜ் நிதியத்திலிருந்து எந்தவித செலவும் அரசாங்க விதிமுறைகளை மீறி செலவு செய்யப்படவில்லை என ஹஜ் குழுத் தலைவரும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான இப்ராஹிம் அன்ஸார் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு நேற்று (13) தெரிவித்தார்.



ஹஜ் நிதியத்திலுள்ள நிதி துஷ்பிரயோகம் செய் யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்கை யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஹஜ் நிதியத்திலிருந்து அரசாங்க விதிமுறைகளை மீறி எந்தவித செலவும் செய்யப்படவில்லை.



அரச அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய புத்தசாசன, சமய, கலாசார அமைச்சின் செயலாளரின் எழுத்துமூல அனுமதியுடன் அத்தகைய செலவுகளும் கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட்டன.



இந்த வருடம் ஹஜ் முகவர்களிடமிருந்து பதிவு செய்வதற்காக சேகரிக்கப்பட்ட வருமானத்துக்கு உட்பட்டதாகவே செலவுகள் மேற்கொள்ளப்பட்டன. மாறாக சேமிப்பிலிருந்த ஹஜ் நிதியத்துக்கான நிதியை இந்த வருட செலவுகளுக்கு பயன்படுத்தவில்லை.



இதேவேளை, வறிய, மார்க்க பக்தியுள்ள களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மூவருக்கு பள்ளிவாசல் நிர்வாகங்களின் சிபாரிசின் பேரில் அமைச்சருக்குள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டது.



இது போன்று இனி வருங்காலங்களில் ஏனைய மாவட்டங்களிலுள்ள வறிய, மார்க்க பக்தியுள்ள முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.



பேசா எனப்படும் Free Movement Pass நியாயமாக நேர்மையாக வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களின் ஏகமனதான தீர்மானத்துக்கு ஏற்ப 30 ஹஜ் யாத்திரிகர்களுக்கு 1 பேசா என்ற அடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலும் உதவிகளும் கிடைக்க வேண்டுமென்பதற்காக கூடுதலான பேசாக்கள் எந்தவித மேலதிக கட்டணமும் அறவிடப்படாமல் ஹஜ் முகவர்களுக்கு நியாயமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் வழங்கப்பட்டன.



இம்முறை உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் கடந்த காலங்களைவிட குறைந்த செலவுகளுடன் குறைந்த உறுப்பினர்களும் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.



அது மட்டுமன்றி, இம்முறை இலங்கையிலிருந்து சென்ற அலுவலர்கள் களத்தில் இறங்கி மினா, முஸ்தலிபா போன்ற இடங்களிலில் காணாமல் போன 6 இலங்கை யாத்திரிகர்களைத் தேடிக் கண்டுபிடித்து 16 கிலோ மீற்றர் தூரம் நடந்து வந்துள்ளனர். இம்முறை 3 யாத்திரிகர்கள் மினா, மக்கா, மதீனா போன்ற இடங்களில் உயிரிழந்தனர். 



அந்த மூவரது ஜனாஸாக்களை உடனடியாக அடக்குவதற்கும் மரண அத்தாட்சிப் பத்திரம் பெறுவதற்கும் இங்கிருந்து சென்ற அலுவலர்கள் இரவுபகல் பாராது உழைத்துள்ளனர்.



இன்னும் பல சேவைகளை புரிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் இதுதொடர்பாக மேலதிக விபரங்களை பெறவிரும்புவோர் தொடர்பு கொண்டால் அதற்கு விளக்கமளிக்கவும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »