பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பில் சமசரம் கிடையாது என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வார் உல் ஹக் ஹக் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபா இழப்பீட்டையும் அவர் கையளித்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜாரன்வாலா நகரில் கடந்த 16 ஆம் திகதி பல கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இறைநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது.
இத்தாக்குல்களின்போது குறைந்தபட்சம் 24 கிறிஸ்தவ தேவாலயங்களும் பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (25) தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 160 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்ற அன்வார் உல் ஹக் காக்கர், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இச்சம்பவத்தை கண்டித்தார்.
'இத்தகைய தாக்குதல் நடத்தும் இருண்ட சக்திகளுடன் பாகிஸ்தான் அரசாங்கமோ சமூகமோ ஆதரவாக இல்லை என அவர் கூறினார். இச்சக்திகள் எம்மில் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால், எம்மிடமிருந்து அவர்கள் பிரிந்துவிட்டனர்' எனவும் அவர் கூறினர்.
அத்துடன், கடந்த திங்கட்கிழமை ஜாரன்வாலா நகருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை பிதமர் அன்வார் உல் ஹக் காக்கர் நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் பாகிஸ்தான் ரூபாவுக்கான (சுமார் 22 இலட்சம் இலங்கை ரூபா, சுமார் 5.45 லட்சம் இந்திய ரூபா) காசோலையையும் அவர் வழங்கினார் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 94 குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்நிகழ்வில் பிரதமர் காக்கர் உரையாற்றுகையில், 'இங்கு நடந்த அவலம் குறித்து கவலையடைகிறேன். ஒவ்வொரு பிரஜையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தீவிரவாதத்துடன் மதம், மொழி, பிராந்தியத்துக்கு தொடர்பில்லை. ஒருவரையொருவர், பராமரிக்கும் ஒரு சமூகம் நிலைத்திருக்கும்.
பாகிஸ்தானின் இருப்புக்கு கிறிஸ்த சமூகம் முக்கிய பங்காற்றியுள்ளது. சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும்.
மனித குலத்தின் எதிரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எமது வார்த்தைகளைவிட எமது செயல்கள் பலமாக பேசும் என நான் உறுதியளிக்கிறேன்' என்றார்.
எதிர்காலம் குறித்து எவரும் எதிர்வுகூற முடியாது என எச்சரித்த பிரதமர் காக்கர் 'ஆனால், சீக்கியர்கள், இந்துக்கள் அல்லது ஏனையோர் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக தீங்கிழைக்கும் தீய சக்திகள் எவையேனும் இருந்தால், அரசாங்கமானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் பக்கத்திலிருந்து அவர்களை தீங்குகளிலிருந்து பாதுகாப்பதை தெரிந்துகொள்ளும்' எனக் கூறினார்.