Our Feeds


Wednesday, August 2, 2023

ShortNews

பனி பாறைக்கு அடியில் சிக்கிய உடல் 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு! - நடந்தது என்ன?



தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.


சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. 


இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழுகின்றது.


இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த உடல் பாகங்கள் அருகிலுள்ள நகரமான சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


1986 ஆம் ஆண்டு மலையில் காணாமல் போன 38 வயது மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்பதை டிஎன்ஏ பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது. 


மலை ஏறியவரின் அடையாளம் மற்றும் அவர் இறந்த சூழ்நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை. இருப்பினும், பனிப்பாறைகளின் அடியிலிருந்து கிடைத்ததாக, காணாமல் போன நபருக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நீண்ட காலணி (ஹைகிங் பூட்) மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் (க்ராம்பன்) ஆகியவற்றின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர்.


'செப்டம்பர் 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மன் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், மலையேற்றத்திலிருந்து திரும்பாததால் முறைபாடு பதிவு செய்யப்பட்டு, அவர் 'காணாமல் போனவராக' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இப்போது கிடைத்திருக்கும் உடல், அவரது உடல்தான் என பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது.

 

பனிப்பாறைகள் உருகி குறையும் போது, அவை பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் பல மலையேறுபவர்களை குறித்த விவரங்களை அதிகளவில் கொண்டு வருகின்றன ' என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஒவ்வொரு கோடை காலத்திலும், ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகும்போது, பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மனிதர்கள் மற்றும் வேறு பொருட்கள் வெளிப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »