Our Feeds


Wednesday, August 2, 2023

ShortNews

இலங்கையில் அதிர்ச்சி - ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிப்பு



இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்,


கடந்த ஆண்டின் இறுதியில் போதைபொருள் பாவனையாளர்களுக்கான எங்கள் புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.


அண்மைகாலமாகவே போதை பொருட்களின் பாவனை இலங்கையில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்களை குறிவைத்தே பல்வேறு போதைப்பொருட்கள் விற்பனையாகின்றன.


இக்குற்றவியல் செயற்பாடானது மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதித்து பின்னடைவை ஏற்படுத்துகிறது.


எனவே இவ்வாறான சூழ்நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையான நபர்களை அவற்றிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கத்தால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.


அதன்படி பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.


ஐஸ் போதைப்பொருள் எவ்வாறாக அறியப்படுகிறது ?


இப்போதைபொருளானது மெத்தம்பெட்டமைன் (Methamphetamine Crystals) எனப்படுகிறது. இது அஜினமோட்டோ வடிவ சிறு படிகங்களாக காணப்படுகிறது. இது ஆய்வு கூடங்களில் மனிதர்களால் செயற்கையாக தயாரிக்கப்படுகின்ற இரசாயனப்பொருளாகும்.


உயர்தரமான இரசாயனப் பொருட்களை கொண்டு இவை தயாரிக்கப்படுவதால் கலப்படம் செய்வது கடினம் இருப்பினும் கலப்படம் செய்ய முயற்சித்தாலும் இரசாயனங்கள் பற்றி அனுபவங்கள் உள்ளவர்களாலேயே விதிமுறைகளோடு செய்ய வேண்டிய நிர்பந்தம் காணப்படுகிறது.


இப்போதைப் பொருளை மனித உடலால் உள்வாங்கக்கூடிய அளவை விட இரசாயன சேர்மானங்கள் கூடும் போது மனிதனுக்கு இறப்பையும் தோற்றுவிக்கும்.


இந்த போதை பொருளானது ஒரு தடவை எடுத்துக்கொண்டாலும் அதற்கு அடிமை படுத்தும் ஆற்றல் கொண்டது.


சாதாரணமாக ஒருமனிதனால் உள்ளெடுக்க கூடிய ஐஸ் போதைப்பொருள் அளவு 200mg இதைவிட அதிகமானால் மரணம் சம்பவிக்கும் நிலை உண்டு.


ஐஸ் போதைப்பொருள் இலங்கையில் தயார் செய்யப்படுகிறதா?


இது இலங்கையில் தயார்செய்யப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை.


ஐஸ் போதைப்பொருள் வெளிநாடுகளிருந்தே கடல் மார்க்கமாகவோ அல்லது வான் மார்க்கமாகவோ அல்லது வேறு வழிகளிலோ சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது.


உத்தியோகபூர்வ தகவல்களின்படி மேல்மாகாணம் கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. 


ஐஸ் போதைப் பொருளை உள்ளெடுக்கும் ஒருவரில் எத்தகைய மாற்றம் நிகழ்கிறது?


48 மணித்தியாலம் வரை ஐஸ் போதைப்பொருளின் தாக்கம் ஒருவரில் இருக்கும்.


Euphoria Effect அதாவது ஒரு மனிதரில் காணப்படும் சாதாரண மகிழ்சியைவிட பன்மடங்கு களிப்பான மாயத்தை ஐஸ் போதைப்பொருள் தருகிறது. இந்த போதைபொருளானது ஒரு தடவை எடுத்துக் கொண்டாலும் அதற்கு அடிமை படுத்தும் ஆற்றல் கொண்டது.


டோபமைன் பெரும்பாலும் “மகிழ்ச்சியின் ஹோர்மோன்” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ஹோர்மோன் ஒருவர் தனக்கு விருப்பமான இன்னோருவரின் அணைப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதிகமாக சுரக்கும்.


எனவே இதன்போது 250μg/dL அளவிற்கே டோபமைன் சுரக்கும். ஆனால் ஐஸ் போதைப்பொருள் எடுக்கும் ஒருவரில் 1100μg/dL அளவிற்கு டோபமைன் அதிகரிக்கும்.


இந்த அதீத மகிழ்ச்சியாலே ஐஸ் போதைப்பொருள் பாவனையிலிருந்து ஒருவரால் வெளிவரமுடியாத நிலை தோன்றும்.

ஐஸ் போதைப்பொருளை அடிமையான ஒருவரில் ஏற்படும் மாற்றங்கள்


Methamphetamine Crystals போதைபொருளானது மைய நரம்பு தொகுதியை தூண்டி போதையை ஏற்படுத்தும் ஆபத்தான போதை மருந்தாக வகைப்படுத்தப்படுகிறது.

இந்த போதைப் பொருளானது இதயத் துடிப்பை அதிகரிக்கும், தூக்கமின்மை, மனஅழுத்தம் மற்றும் தலைவலி, தலைச்சுற்றல், மங்கலான பார்வை, சுவாச பிரச்சனைகள், எடை இழப்பு, கடுமையான பல் சிதைவு, போன்ற பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.


இலங்கையில் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க விஷ மற்றும் ஆபத்தான ஓளடதங்கள் சட்டத்தின் பிரகாரம் குறித்த சட்டமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ம் திகதி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் கையொப்பம்மிட்டு அமுலுக்கு வந்தது


ஐஸ் போதைப்பொருள் பட்டியலிலேயே மிகவும் ஆபத்தானது.


குறித்த போதை பொருளானது முதலில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் தமது போர்வீரர்களை ஓய்வின்றி போராட பயன் படுத்திய ஆயுதமாகவே இது அனைவராலும் கருதப்படுகின்றது.


ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது 100% இரசாயனமாகவே பார்க்கப்படுவதுடன் ஏனைய போதைப் பொருட்களை விடவும் ஐஸ் போதைப்பொருளின் நச்சு தன்மையானது நீண்ட நாட்களுக்கு உடலில் தங்க கூடியது.


இத்தகைய ஐஸ் போதைப்பொருளை எதிர்த்து மரண தண்டனை அமுலாக்கபட வேண்டும் என்று 2019 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா பிபிசிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், “மரண தண்டனையை நீக்கும் சட்டம் வரைவு பாராளுமன்றுக்குக் கொண்டு வரப்படுவது, அவ்வாறு கொண்டு வரப்பட்டால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழலுலகத்தினர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதாக அமைந்துவிடும். மரண தண்டனை நீக்கும் சட்ட வரைவு பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டால் அன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனபடுத்துவேன்" என தெரிவித்தார்.


இலங்கையில் 1974 ஆம் ஆண்டு பின் யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை.


பின்னர் 1959ஆம் ஆண்டு ஜனாதிபதியின் அனுமதியுடன் தண்டனை வழங்கபட வேண்டும் என மரண தண்டனை சட்டம் அமுலுக்கு வந்தது.


உலகில் குறைந்தளவிலான நாடுகள் கொலை, கொலை தொடர்பான குற்றம், பாலியல் வன்புணர்வு, போதைப் பொருள்சார் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையும் 2012 முதல் போதை மருத்துத் தொடர்பான குற்றஞ்சாட்டுக்கு மரண தண்டனையை சட்டப்படியான நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »