Our Feeds


Monday, October 23, 2023

ShortNews Admin

VIDEO: குழந்தைகள் கொல்லப்பட வேண்டியவர்களா? ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்!



ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாச்சார மேம்பாட்டுப் பிரிவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல், இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கான கூட்டத்தின் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.


அப்போது பேசிய ஐ.நா. அமைப்பிற்கான பாலத்தீன தூதரக அதிகாரியான சஹர் கே.ஹெச் சாலெம், பலஸ்தீன அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இன அழிப்பை உடனே நிறுத்தக் கோரி அழுதழுது பேசிய பேச்சு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.  


"11 நாட்களாக, காஸா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இப்படி நேரடி தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் தான்.


"காஸாவில் உள்ள ஒரு பாலத்தீன குடும்பத்தைக் கூட இஸ்ரேல் காப்பாற்றவில்லை, காயமடையாதவர்கள் இடம்பெயர்கிறார்கள், அல்-அஹ்லி மருத்துவமனையில் பாதுகாப்பு இருப்பதாக நினைத்து அங்கு அடைக்கலம் தேடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இது போன்ற தாக்குதல்கள் தான் இஸ்ரேலை பாதுகாப்புடன் இருப்பதாக உணர வைக்கிறதா? இது இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவின் தேவையை நிறைவேற்றுகிறதா? பாலத்தீன குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளின் மீது குண்டு வீசிக் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையே அறிக்கைகளை தெளிவாக வெளியிட்டுள்ளதே?


பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள், பாடசாலைகள், ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.


அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன, "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன.


இதில், "மோசமான விஷயம் என்னவென்றால், 22 மருத்துவமனைகளில் இருப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை, உலக சுகாதார அமைப்பு (WHO) நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை என்று முத்திரை குத்தியுள்ளது.


"காஸாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இந்த பேரழிவு எப்போதும் போல போரில் விளைந்த ஒரு சேதமாக கருதப்படக்கூடாது. இது மனிதாபிமானமற்றது, சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கு விதிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலுகிறது.


இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக நிற்கவும், அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள மனித இன அழிப்பை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். "எங்களுக்கு நீதிதான் தேவையே ஒழிய பழிவாங்குதல் தேவையல்ல" உலகத்தின் ஆதரவு பாலத்தீனர்களுக்கு மிகவும் தேவையானது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »