27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் பாகிஸ்தானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்துக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கொழும்பு 5 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.
இவர் நேற்று இவற்றைக் கொண்டுச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது பொதிகளை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 10 கிலோ 500 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த ஹெரோயின் போதைப்பொருட்கள் 8 பொதிகளாக தயார் செய்யப்பட்டு கடந்த 10ம் திகதி பாகிஸ்தானில் இருந்து ஓமான் எயார்லைன்ஸின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஹெரோயின் போதைப்பொருள் நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் உள்ள இறக்குமதி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவை என விசாரணையில் தெரியவந்துளள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
