Our Feeds


Friday, February 16, 2024

SHAHNI RAMEES

அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்போம்! - ஜனாதிபதிமஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட

அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை நேற்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்தார். 


இதன்போது விவசாயிகள் ஜனாதிபதியிடம் தங்களது பிரச்சினைகளை நேரடியாக கூறியதோடு, அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்தார்.  


வேலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், எதிர்ப்புக்களை கைவிடுமாறும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிந்துக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  


அது தொடர்பிலான மக்களின் யோசனைகளை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறும், அவற்றில் சாதகமான விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹா கனதார குளத்தை அண்மித்து வசிக்கு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாக மஹாகனதார ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க தெரிவித்தார். 


மஹாகனகதராவ குளத்திற்கு நீரைக் கொண்டு வரும் கால்வாய்களைப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வழங்கினால் பெருமளவிலான நீரை சேமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மஹாகனதராவ குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு இவ்வருடத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் ரூபாவை உடனடியாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார். 
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 


''இந்த வேலைத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது. நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவரையில் எல்லா அரசாங்கத்திலும் நீர் வழங்கல் சபை ஒரு அமைச்சின் கீழும் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு அமைச்சின் கீழும் காணப்பட்டது. இம்முறை அவை இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இந்த வேலைத் திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.'' என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.  
நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்‌ஷ 


''இந்த குளத்தில் 1000 ஏக்கர் அடி கொள்ளவை கட்டாயமாகப் பெற்றுகொள்ள வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்படவில்லை. விவசாயச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விவசாய அமைப்புக்களுக்கு அவசியமான நீரை வழங்க வேண்டும். அதன்படியே குடிநீருக்காக விநியோகிக்கப்பட வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதற்கான இணக்கப்பாட்டினை நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. மழைவீழ்ச்சி, குறைவடையும் போது இந்த குளத்திலிருந்து விவசாயத்திற்கு நீர் பெறப்படாது என்ற யோசனைக்கு சட்டபூர்வமான ஆவணத்தைத் தயாரித்து விவசாயிகளும் நீர்பாசன திணைக்களமும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட வேண்டும். உங்களிடம் மேலதிக யோசனைகள் இருக்குமாயின் அவற்றையும் உள்வாங்க முடியும்.'' என்று தெரிவித்தார்.


முன்னாள் மாகாண அமைச்சர் எச்.பீ.சேமசிங்க 


''இந்த நீர்த்திட்டம் மிகச் சிறப்பானது. உணவுக்கு நீர் கிடைக்குமா, குடிப்பதற்கு நீர் கிடைக்குமா என்று இப்பகுதிகளில் பெரும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணியே அதற்கு தலைமை தாங்கியது. அதனால் இன்று விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் உறுதி மாத்திரமே தேவைப்படுகிறது. விவசாயத்திற்கு பாதிப்பின்றி குடிநீர் திட்டத்தை செயற்படுத்தப்படும் என்ற உறுதியை மாத்திரமே எதிர்பார்க்கிறோம். இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க முடியாதென ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை. நான் செல்லும் பாதையில் உரிய இடத்தில் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்றே கூறினார். மஹாகனதராவ குளம் மற்றும் ஏனைய பகுதி விவசாயிகள் குறித்து ஜனாதிபதி எந்த அளவு அக்கறை காண்பிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேறு தலைவர்களாயின் மக்களுக்கு வர முடியாதெனில் தானும் வரப்போவதில்லை எனக் கூறிச் சென்றிருப்பார்கள். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை.'' என்று தெரிவித்தார்.


முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, 

''ஆர்ப்பாட்டம் செய்வதால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீராது. அதனால் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கமைய விவசாயிகளும் நீர்பாசன திணைக்களம், நீர் வழங்கல் சபையினரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைசாத்திடுவோம். அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் வீதிகளுக்கு வந்து, பிரச்சினைகளை தீர்த்துகொள்வோம். பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வீதிகளில் இல்லை.'' என்று குறிப்பிட்டார்.


மஹாகனதராவ ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபசிங்க ரத்நாயக்க, 


''நாம் நீர் வழங்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குளத்தில் 38,000 ஏக்கர் அடி நிலத்திற்குத் தேவையான நீர் கொள்ளளவு காணப்படுகிறது. விளை நிலத்திற்கு 52,000 ஏக்கர் அடி நீர் தேவைப்படும். எஞ்சிய 14000 ஏக்கர் அடிகளுக்கு எவ்வாறு நீரை பெற்றுகொள்வது? அதற்கான அளவு போதுமானதாக இல்லாதபோது நீர் வழங்கலுக்கு 1000 ஏக்கர் அடிகளைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு? என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமாயின் இதனை ஏற்றுக்கொள்ள நாம் தயார். மஹாகனதராவ விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி எம்முடன் கலந்துரையாடும் முதல் தடவை இதுவாகும். எனவே ஜனாதிபதியின் வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.'' என்று தெரிவித்தார்.மஹாகனதராவ விவசாயச் சங்கத்தின் பொருளாளர் துசித சம்பத்,


''நாம் நீர்த் திட்டத்தைத் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. எமது விவசாயத்திற்கு எவ்வாறு நீர் பெற்றுகொள்ள முடியும் என்ற பிரச்சினைக்காகவே வருகை தந்திருக்கிறோம். மக்களுக்கு குடிநீர் வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. இருப்பினும் இதனால் குறைவடையும் நீரை எவ்வாறு விவசாயத்திற்காக பெற்றுக்கொள்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இரு பகுதிக்கும் ஒரே அளவில் நீரை விநியோகிக்க முடியுமாயின் நாம் வீதியில் இறங்கபோவதில்லை.'' என்று குறிப்பிட்டார்.


விவசாயி ஒருவர் 


''இந்த மஹாகனதராவ குளத்தின் கீழ் பிரிவில் உள்ள கால்வாய்கள் 1960களில் அமைக்கப்பட்டவையாகும். 50 - 60 வருடங்கள் பழமையானவை. ஜனாதிபதி அவர்களே அணை உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. குளத்தைப் புனரமைக்க 1000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ் பிரிவிலிருக்கும் குளக் கட்டுகள் 25 கிலோ மீற்றர் நீளமுடையது. தெற்கில் இருக்கும் குளக்கட்டு 17 கிலோமீற்றர் நீளமுடையது. இரு பகுதிகளிலும் 50 இணை வாவிகள் உள்ளன. மேலும் 500க்கும் மேற்பட்ட நீர் கசிவுகள் காணப்படுகின்றன. இவ்வாறு விரயமாகும் நீரை சேகரிக்க முடியும். தற்போது எமக்கிருக்கும் 38,000 ஏக்கருக்கான நீரில் 15000 ஏக்கருக்கும் அதிகமான நீர் வீண் விரயமாகிறது. ஜனாதிபதி அவர்களே, நாம் கூறிய விடயங்களுக்கு சாதகமான பதில்களைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகிறோம்.'' என்று அந்த விவசாயி தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன உட்பட பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இதன்போது உடனிருந்தனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »