Our Feeds


Thursday, March 21, 2024

ShortNews Admin

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்..!


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர்

அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.


விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.


அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரசித்தப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கும், வரவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அண்மைய காலமாக காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. விவசாய அமைச்சு என்ற வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.


பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. கால்நடை உற்பத்தியை அதிகரிக்க சுகாதார திணைக்களம் மற்றும் 09 மாகாண சபைகள் இணைந்து கால்நடை வளர்ப்பின் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


மேலும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க 06 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரை 03 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. வீழ்ச்சியடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். அந்த நாடு இன்று மக்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »