Our Feeds


Wednesday, April 24, 2024

ShortNews Admin

இந்திய உதவியின் கீழ் மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம்

இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள்

விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 90 கிராமங்களில் 1,668 வீடுகள் கட்டும் பணி இதுவரை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 732 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் 04 வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மட்டத்திலான வீடமைப்புத் திட்டம் தென் மாகாணம், கிராம சக்தி வீட்டுத் திட்டம், வடக்கு மாகாணம், கிராம சக்தி வீடு திட்டம் அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய நான்கு திட்டங்களாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு 600 வீடுகள் என்பதோடு மொத்தமாக 2400 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை 2400 மில்லியன் ரூபாவாகும். ஏற்கனவே 807 மில்லியன் ரூபா இதற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1592.7 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்திய உதவியின் கீழ் தோட்டபுற வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படைப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, 8445 தோட்டபுற வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 23,646 மில்லியன் ரூபாவை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார். தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளை நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »