Our Feeds


Tuesday, April 30, 2024

ShortNews Admin

பௌத்த மதத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் போயா தினத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும். - டயானா



சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.


நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (29) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,


“..இந்த நாட்டில் சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இது குறித்து கடந்த காலங்களில் குரல் கொடுத்துள்ளேன்.


சுற்றுலாப் பயணிகளுக்கு உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பது, சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பது, குறிப்பாக இலங்கையை விளம்பரப்படுத்தும் விளம்பர வீடியோக்களை ஒளிபரப்பிய சுற்றுலாப் பயணிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என பல்வேறு முறைப்பாடுகள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில தவறு செய்பவர்களால் நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.


ரயில்வே டிக்கெட்டுகளின் அதிக விலைக்கு பெரும்பாலும் ஒரு சில ஊழல் அதிகாரிகளே துணைபோகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இந்த சூழ்நிலையை தவிர்க்க நாங்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதை ஒழுங்குபடுத்துகிறோம். இந்த அமைப்பை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்தகைய தந்திரோபாயங்கள் மூலம் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.


மேலும், சட்டவிரோத மது விற்பனையால், நம் நாட்டுக்கு கோடிக்கணக்கான வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எமது நாடு பௌத்த நாடு என்பதனால் பௌத்த மதத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் போயா தினத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும். ஆனால் அந்த காலத்திலும் நம் நாட்டு மக்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்கிறார்கள். அவர்களை தடுக்க இருக்கும் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். ஒரு சிலரின் ஊழல் நடவடிக்கைகளால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இவ்வாறான மோசடி மற்றும் ஊழலை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க நான் முன்மொழிந்துள்ளேன்.


மேலும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக மேலும் 49 சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை சுற்றுலா வலயங்கள் என பெயரிட்டு ஒரு மாதத்திற்குள் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம், நம் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என நம்புகிறோம்.


இந்த நாட்டில் செயற்படும் SPA தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய இடங்கள் மற்ற நாடுகளில் ஆரோக்கிய மையங்களாக செயல்படுகின்றன. நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நெறிப்படுத்தவும் கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்கவும் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருகிறோம்..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »