Our Feeds


Tuesday, April 23, 2024

SHAHNI RAMEES

நமது சமூகத்தின் நலனுக்காக முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டு நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் - ரிஷாட்



 (எஸ்.அஷ்ரப்கான்)

முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம்

பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு கடைசியில் ஏமாற்றப்பட்டுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


பொத்துவில் பிரதேசத்தில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கில் புத்தளம் மாவட்டத்திலே முஸ்லிம் காங்கிரஸோடு சேர்ந்து அவர்கள் சார்ந்த கட்சி ஒன்றில் உடன்படிக்கைகளை செய்து தராசு சின்னத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம்.



 அவ்வாறு போட்டியிட்டதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் அலி சப்றி றஹிம் வெற்றிபெற்றார்.


எமது கட்சியைச் சேர்ந்த அலி சப்ரி ரஹீம் தங்கம் கடத்தியதனால் அவருடைய பிரச்சினை தொடர்பாக கட்சி விசாரணை செய்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கினோம்.


 அவரை நீக்கிய அந்த கடிதத்தினை தராசு சின்னத்தின் கட்சிச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கிமுடைய உறவினர் நயிமுல்லாவிடம் கொடுத்தோம். அதற்கான பதில் கடிதத்தினை தாருங்கள் என தொடர்ச்சியாக கோரிக்கையும் விடுத்தோம். 


அவரினால் எந்தவிதமான பதிலும் வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கிமை மூன்று முறை நேரடியாகச் சந்தித்து எமது உடன்படிக்கையின் பிரகாரம் செயல்படுங்கள் என தெரிவித்தேன். ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்தவிதமான பதிலுமில்லை.


 பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று தனது உறுப்பினர் பதவியினைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.


தேர்தல் காலங்களில் சமூகத்தினுடைய ஒற்றுமை பற்றி பேசிவிட்டு ஒற்றுமையினால் பெறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமூகத்துக்கு துரோகம் செய்துவிட்டு செல்கின்ற போது ஒற்றுமைப்பட்டு செயல்பட்ட இரண்டு கட்சிகள் ஒரு கட்சியினுடைய விடயத்தில் உடன்படிக்கையினை மீறுவது பாரிய துரோகமாகும். இவ்வாறான பாரிய துரோகத்தினை முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு செய்தது. இவ்வாறு துரோகம் செய்த கட்சியோடு எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுவது.


தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் பிரயோசனமாக கருத முடியாது தேர்தலின் பின்னரும் சமூகம் சார்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதனை விட சமூக உணர்வோடும் கட்சியோடும் விசுவாசமானவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக பெற வேண்டும் என்பதிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »