Our Feeds


Tuesday, April 23, 2024

SHAHNI RAMEES

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

 


பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச்

சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.


இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.


இந்நிலையில்,  தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை  (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.


இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த  தொடங்கினர்.


அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.


இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.


உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.


கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »