Our Feeds


Friday, April 19, 2024

News Editor

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும்


 இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒற்றுமை ஒன்றே தேவையெனவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அப்பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வங்கிக் கிளைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத், தாம் வேறொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தான் அந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த “யழி புபுதமு ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைவரும் ஆதரித்திருந்தால் இன்று இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், அன்று அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2048 அபிவிருத்தியடைந்த நாடு வேலைத்திட்டத்திற்கு குழிபறிப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டு 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம் என அசோக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச மற்றும் நுவரெலியா மகாநகர சபையின் முன்னாள் மேயர் சந்தன லால் கருணாரத்ன மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளம் அரசியல்வாதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »