Our Feeds


Saturday, April 20, 2024

News Editor

அம்பேவெல பால் பண்ணைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்


 உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) அங்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது வழங்கப்பட்ட பணிப்புரைகளின்படி, கடந்த ஆண்டு பண்ணையில் விரிவான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

2022 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பண்ணைக்குச் சென்றபோது, அதன் தினசரி பால் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 40,000 லிட்டராக இருந்ததுடன், பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இவ்வருடம் நாளாந்தம் 52,000 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இது 30% அதிகரிப்பாகும் எனவும் அம்பேவெல பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.

பால் உற்பத்தித் திறனை படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 20 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்ய பண்ணை குழு செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கறவை மாடுகளில் உயர்தர வகைகளை இந் நாட்டிலேயே உருவாக்க அம்பேவெல குழுமம் தற்போது செயற்பட்டுள்ளதுடன், அந்த கறவை மாடுகளை பராமரித்தல், தேவையான உணவு நீராகாரம் வழங்குதல், எடையிடுதல், நோய் நிலைகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றை கண்டறியும்போதே மாடுகளை பிரித்துவிடுதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தானியங்கி முறையில் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன.

பண்ணைக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்வருடம் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பண்டார மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »