Our Feeds


Thursday, April 25, 2024

News Editor

ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்வதற்கு அனுமதி இல்லை ; ரயில் திணைக்களம்


 ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரயல் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பதால் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண, பயணிகள் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி  பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில் காவலர்கள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மலையக  ரயில் மார்க்கத்தில் கடுகதி ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி  பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் விபத்துக்கள் ஏற்படுவது கவலை அளிக்கிறது.

ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிக்க வேண்டாம் என்று ரயில் திணைக்கள அதிகாரிகள் அறிவித்தாலும், சுற்றுலாப் பயணிகள் அவ்வாறு செல்வதை தடுக்க கடினமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் அதிகாரிகளால் தாங்கள் துன்புறுத்தப்பட்டுவதாக ரயில் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்கின்றனர். அத்தோடு, சமூக ஊடகங்களில் மோசமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்வது தொடர்பாக தற்போது எந்த விதிகளும் நிபந்தனைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால், விபத்துக்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஒஹியா ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே கடுகதி  ரயிலில்  படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்தார். 

இதேபோல், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி விழுந்து  பலத்த காயம் அடைந்தார்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களை சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்வதைத் தடுக்க ரயில் காவலர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை பயணிகள் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »